ஒரு கோல் கூட போடாமல்தோல்வியடைந்த ஜெர்மனி – ரசிகர்கள் கண்ணீர்

உலகின் நம்பர் ஒன் கால்பந்து அணியும் தற்போதைய சாம்பியனுமான ஜெர்மனி இன்று ஒரு கோல்கூட போட முடியாமல் 15-வது இடத்தில் இருக்கும் மெக்சிகோவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் பரிதாபமாகத் தோற்றது..!

போட்டியின் துவக்கத்தில்இருந்தே மெக்சிகோ வீரர்களின் துடிப்பான ஆட்டம் ஜெர்மனி வீரர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். அந்த அளவுக்கு கோல் போஸ்ட்டை நோக்கி அவர்கள் ஓடிய ஓட்டமும், பாஸிங் செய்த விதமும்.. சபாஷ்.. சரியான போட்டி என்றுதான் சொல்ல வைத்தது..!

35-வது நிமிடத்தில் அந்த பாஸிங்கில் வந்த பந்தை மெக்சிகோ வீரர் Hirving Lozano லாவகமாக கோலுக்குள் அடித்தவிதம் திரில்லிங்தான். இதன் பிறகு 3 முயற்சிகள் இதேபோல் கோல் அருகில் சென்றும் மெக்சிகோவால் கோலாக்க முடியவில்லை.

இடைவேளைக்கு பின்பு திடீரென்று பாய்ந்தார்கள் ஜெர்மனியினர். அதிலும் கடைசி 20 நிமிடங்கள் உச்சக்கட்டப் போர் என்பதை போல அடுத்தடுத்து மெக்சிகோவின் கோல் போஸ்ட்டையே சுற்றி சுற்றி வந்தார்கள். 4 முறை மெக்சிகோவின் கோல் கீப்பர் பந்தை பிடித்துவிட.. 3 முறை அருகில் சென்றும் கோல் போட முடியாமல் ஏமாற்றினர் ஜெர்மன் அணியினர்.

ஒரு கோலோவாது போடலாம் என்று கவுரவப் பிரச்சினையை போல நினைத்து முட்டி மோதியும் கடைசியில் முடியாமல் போனது ஜெர்மனி அணியினரின் துரதிருஷ்டம்தான்..!

கேலரியில் மெக்சிகோ ரசிகர்கள் இந்தத் திடீர் வெற்றியினால் சந்தோஷத்தில் கூச்சலிட.. ஜெர்மன் ரசிகர், ரசிகைகள் கண்ணீர்விட்டு அழுதனர். இதேபோல் மைதானத்திற்குள்ளேயே கண்ணீர்விட்டு அழுதனர் மெக்சிகோ வீரர்கள். இது ஆனந்தக் கண்ணீர்..!

பின்னே.. பலம் வாய்ந்த தற்போதைய சாம்பியனை ஒரு கோல்கூட போட விடாமல் தோற்கடிப்பது எப்பேர்பட்ட சாதனை.

-சரவணன்

Leave a Response