மரம் நட சங்கடம் தரும் தமிழக அரசு – ஜெகத் கஸ்பர் வேதனை

ஒக்கி புயலில் குமரி மாவட்டம் 30 லட்சத்திற்கும் மேலான மரங்களை இழந்தது. இப் பசுமை இழப்பை ஈடு செய்யவும், எதிர்கால பசுமை பாதுகாப்புமாக மீண்டும் குமரி மாவட்டத்தில் பனைமரக்காடுகள் உருவாக்கும் திட்டத்தை நாம் குமரி மக்கள் அமைப்பு நடத்தி வருகிறது.

இதனை ” பனை நாடு’ இயக்கத்தின் கீழ் மக்கள்மயப்படுத்தும் இரண்டாம் கட்ட செயற்பாடுகளின் தொடக்க விழா நாளை ஜூன் 18 காலை 11 மணிக்கு நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்றது.

100 கல்லூரி மாணவியர் இணைந்து பனை விதைகள் நட்டார்கள். அதன் பின் சாமித்தோப்பு ஐயா வைகுண்டர் பதியில் பாலபிரசாபதி அடிகளார் தலைமையில் அங்கு பனை விதைகள் நடப்பட்டன.

அதன் பின்னர் பனைமரக் காட்டிற்கான முதல் விதைகளை முகிலன் குடியிருப்பில் விதைத்தபின் நிறைவாக பார்வதிபுரம் “மலர்” அலுவலகத்தை சுற்றியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பனை விதைகள் நடப்பட்டன.

நாம் குமரி மக்கள் இயக்கத் தலைவர் தேவசகாயம் IAS தலைமையில் மீண்டெழும் குமரி திட்ட இயக்குநர் தாமஸ் பிராங்கோ குமரி பனைநாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இதையொட்டி சுமார் 500 பனை ஆர்வலர்கள் இரு சக்கர வாகனங்களில் பயணப்பட்டு மக்களிடையே பனைமர விழிப்புணர்வை ஏற்படுத்தியபடி 20இடங்களில் பனை விதைகள் நடுவதாக இருந்தது.

ஆனால் வாகனங்களில் குழுவாகச் செல்ல குமரி மாவட்ட காவல்துறை தடை விதித்துள்ளதால் வாகனப்பயணம் கைவிடப்பட்டது.

இது தொடர்பாக பனைநாடு இயக்க நிறுவனர் ஜெகத்கஸ்பர் கூறியிருப்பதாவது…

உலகிலேயே மரங்கள் நட, அதிலும் தமிழரின் பண்பாட்டு தேசிய மரமான பனைமரங்கள் நட சிரமங்களை உருவாக்கும் ஒரே அரசு நிர்வாகம் தமிழகமாகத்தான் இருக்கவேண்டும். மோசமான ஆப்பிரிக்க கண்டத்து தோற்றுப்போன அரசுகள்கூட மரங்கள் நட சங்கடங்களை உருவாக்குவதில்லை.

திறமைக்கும் பொது பண்புகளுக்கும் ஒரு காலத்தில் பெயர் பெற்றிருந்த காவல்துறை ஒரு பெரும்புயலில் 30 லட்சம் மரங்களை இழந்த மாவட்டத்தில் பொதுச்சமூக மக்களின் பசுமை முயற்சிகளுக்குத் துணை நிற்காமல் கெடுபிடிகள் செய்வது தூத்துக்குடி நிகழ்வுகளில் காவல்துறை பெற்றுள்ள அவத்தோற்றத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

எனினும் மனம் சோர்ந்துவிடாது அஹிம்சையின் உயர் வெளிப்பாடுகளில் ஒன்றான பனை மரங்கள் நட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response