கால்பந்து திருவிழா – ரொனால்டோ அதிரடியால் தப்பிய போர்ச்சுகல்

உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் போர்ச்சுக்கல் – ஸ்பெயின் அணிகள் மோதின.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பைக் கால்பந்து தொடர் ரஷ்யாவில் நேற்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி 3 புள்ளிகளைப் பெற்றது. இதையடுத்து இன்று 3 போட்டிகள் நடைபெற்றன.

இதில் முக்கிய மற்றும் கடைசி ஆட்டமாகப் புகழ்பெற்ற போர்ச்சுக்கல் – ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் பலத்த எதிர்ப்பார்க்கிடையில் போர்ச்சுக்கல் கேப்டனும், நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறங்கினார்.

ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க அதைச் சரியாக பயன்படுத்தி ரொனால்டோ கோல் அடித்தார்.

இதனையடுத்து ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் தியாகோ கோஸ்டா கோல் அடிக்க 1 – 1 ஆட்டம் சமமானது.

பின்னர் 44-வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 2 – 1 என்ற கணக்கில் போர்ச்சுக்கல் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதும், ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. 55-வது நிமிடத்தில் தியாகோ கோஸ்டா மீண்டும் கோல் அடிக்க, 58-வது நிமிடத்தில் நாச்சோ ஒரு கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் 3- 2 முன்னிலை பெற்றது.

இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. கடைசிக்கட்டத்தை எட்டிய போது ஆட்டம் முடிய 2 நிமிடமே இருந்த நிலையில், பிரீ- கிக் மூலம் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடிக்க ஆட்டம் 3 – 3 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக நடந்த முதல் ஆட்டத்தில் எகிப்தைவீழ்த்தி உருகுவேவும் , இரண்டாவது ஆட்டத்தில் மொராக்கோவை வீழ்த்தி ஈரானும் வெற்றிபெற்றது.

Leave a Response