கல்லணை போராட்டத்தில் ரஜினி, கமலைச் சாடிய பாரதிராஜா

இந்திய அரசே! காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு

தமிழ்நாடு அரசே – காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய்

காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு!

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, கல்லணையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் ஒருங்கிணைப்பில் ஏப்ரல் 27 வெள்ளி காலை 10 மணியளவில் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு இயக்குநர் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா,

தமிழகம் பல்வேறு சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. காவிரி தலைக்காவிரியில் பிறந்தாலும், எங்கள் ஊருக்கு வந்தபோதுதான் காவிரித் தாய் ஆனது. அப்படிப்பட்ட தாய் இன்றைக்குக் காய்ந்து கிடக்கிறது. இந்தக் காவிரியில் தானாய் போன தண்ணி. இன்று இப்படி ஆனதற்கு காரணம் அரசியல் விளையாட்டு.

காவிரி விவகாரத்தில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறது மத்திய அரசு. உங்களை எப்படி நம்பி, நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வது. எல்லோருக்கும் தமிழ் உணர்வு உள்ளது. ஆனால், அவர்கள் எல்லோரும் தமிழர்கள் ஆகிவிட முடியாது. இந்தக் கூட்டத்தில் அடையாளத்தை தொலைத்துவிட்டு தமிழர் கொடியை தூக்கிக்கொண்டு நின்றீர்கள். வீதிகளில் ஒரே குடையின் கீழ் இணையுங்கள்.

மராட்டியத்தில் பிறந்து கர்நாடகத்தில் வளர்ந்த நீ தமிழன் என்கிறாய், நீ என் நண்பன், நல்லவன்.. தமிழன் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சிகரெட் தூக்கிப் போட்டு பிடித்த உன்னை ரசித்தோம். ஆனால், உன்னைத் தலைவன் என ஏற்றுக்கொள்ள முடியாது.

ரசிகர்களுக்கு ஒன்று சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். நடிகராய் அவரின் கலையை ரசியுங்கள். ஆனால், நம் பாதுகாப்பு வேறு, கலாசாரம் வேறு. இன்னொருத்தவர் வந்து ஆளுவதை நாம் ஏற்க முடியாது.

இன்னொருவர் ஏசி அறைக்குள் அமர்ந்து அரசியல் பேசுகிறார். டிவிட்டரில் கருத்துகளைப் பதிவிட்டால் போதுமா. நாங்கள் காவிரிக்காக உலகத்தின் கவனத்தை திருப்புவதற்காக ஐ.பி.எல்- க்கு எதிராகப் போராடினோம். ஆனால், இவர்கள் ஏன் மைதானத்தை நோக்கி போராட வேண்டும் கோட்டை நோக்கிப் போராடவில்லை என்றார்கள். ஏன் நீ போராடு, இவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்துச் சாதிக்கப் போகிறார்களாம்.

மத்திய அரசு குழப்பம் பண்ணுவது தொடர்கிறது. இந்தப் போராட்டத்தில் நல்ல விஷயங்கள் நிறையச் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்டு விழிப்புணர்வு கொள்ளுங்கள் இல்லையேல் இனம் அழியும். இந்திய தேசத்துக்கு நாம் எதிரி இல்லை.

முருகன் வட நாட்டில் இருக்காரா? பரமசிவன் பார்வதி, விநாயகர் கொண்டு வந்த ஆளு. எங்களுக்கு சாமியே நடுகல்தான். ஜான்சிராணி குறித்து படிக்க வைக்கிற நீங்க, வேலுநாச்சியார் குறித்தும் படிக்க வையுங்கள்.

நாம் ஒரு குடையின் கீழ் இணைய வேண்டும். நாம் அனைவரும் அண்ணன் தம்பி போல் ஒற்றுமையாய் இருந்துகொண்டு பிரச்னையைத் தீர்த்துவிட்டு, பிறகு பாகம் பிரித்துக் கொள்வோம்

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

Leave a Response