பாதையை மாற்றிய ஜீவா..!


கடந்த ஏழு வருடங்களுக்கு முன் வெளியான ‘கோ’ படத்திற்குப்பின் ஜீவாவிவிற்கு சொல்லிக்கொளும்படியான ஹிட் படம் எதுவும் அமையவில்லை. குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக இறங்கு முகம் தான் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. அதனால் தற்போது கதைகளை தேர்ந்தெடுப்பதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

அந்தவகையில் அவர் தேர்ந்தெடுத்துள்ள படம் தான் “கொரில்லா”. ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்தில் சிம்பன்சீயுடன் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக பயிற்சிப்படுத்தப்பட்ட சிம்பன்சீயை வைத்து இப்படம் தயாராகவுள்ளது.

இந்த படத்தில் நடிக்கவுள்ள சிம்பன்சீ தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற விலங்குகள் பயிற்சி மையமான ‘சாமுட்’ பயிற்சி மையத்தால் பயிற்றப்பட்டது. இந்த பயிற்சி மையத்தில் இருந்து பயிற்றப்பட்ட சிம்பன்சீகள்தான் ஹேங்ஹோவர்-2, ப்ளேனட்ஸ் ஆஃப் தீ ஏப்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த சிம்பன்சீகளாகும். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.

“இந்தப்படத்திற்காக தாய்லாந்தில் பிரத்யேகமாக ஒரு சிம்பன்சீ 4 மாதங்களாக தயார்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிம்பன்சீ பங்குபெறும் காட்சிகள் அனைத்தும் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். குறிப்பாக குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன” என்கிறார் இயக்குனர் டான் சாண்டி.

“கொரில்லா” படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு அடுத்தமாதம் தொடங்குகிறது. இதற்குமுன் சிபிராஜ் நடித்து சூப்பர்ஹிட்டான நாய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் ஒரு நாயை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டு இருந்தது. அந்தவகையில் சிபிராஜின் பாணியில் ஜீவா தனது பாதையை மாற்றியுள்ளதால் நிச்சயம் இந்தப்படம் வெற்றிப்படமாகும் வாய்ப்பு நன்றாகவே தெரிகிறது.

Leave a Response