இசையால் அதிகாரத்தைச் சுக்குநூறாக்கும் படம் – ஜிப்ஸி படத்துக்கு சி.மகேந்திரன் பாராட்டு

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜிப்ஸி. இப்படம் மார்ச் 6 ஆம் நாள் வெளியானது.

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்துவிட்டு இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் எழுதியிருக்கும் பதிவில்….

இன்று தஞ்சை கமலா திரையரங்கில் ஜிப்சி படம் பார்த்தேன். சென்னையில் படம் பார்ப்பதை விட தஞ்சையில் படம் பார்த்தது வேறுபட்ட உணர்வை எனக்குத் தந்தது. பார்வையாளர்களின் உணர்வும் என்னுடைய உணர்வும் ஒத்துப் போனது.

இரண்டாம் நாளில் மக்கள் திரைப்படம் பற்றி கேள்விப்பட்டிருக்க வேண்டும். கூட்டம் அதிகரித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தந்தது. படம் சிறந்த வெற்றியைப் பெரும் நம்பிக்கை வந்துவிட்டது.

இன்றைய மக்கள் அரசியலின் ஆழத்தை அதற்கான தீவிரத்துடனும், தீர்வுடனும், முன்வைப்பதில் சிறந்த கலைப்படைப்பாக திரைப்படம் அமைந்து விட்டது. சதி செய்து திட்டமிட்டு கலவரங்களை உருவாக்குவதுதான் இன்றைய வாக்கு வங்கியை உருவாக்கிக்கொள்ளும் அருவெறுப்பான அரசியல்.

இந்த அருவெறுப்பான அரசியலால் எவ்வளவோ இழந்து விட்டோம். 200 ஆண்டுகள் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் இறந்தவர்களை விட சுதந்திரம் அடைந்ததற்கு பின் மதக் கலவரங்களால் செத்துப் போனவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இதுவே மதவெறி அரசியலின் கொடுமையை அறிந்து கொள்வதற்கு போதுமானதாக இருக்கிறது.

ஜிப்சி, மனிதம் தாண்டி மதங்கள் இல்லை என்ற முழக்கத்தை உரக்க. முழங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த வரிகளின் உயிர்ப்பு தான் இந்தியாவின் உயிர்.இதற்கு இன்று ஏற்பட்டுள்ள ஆபத்தை திரைக்கதை நமக்கு உணர்த்துகிறது. டெல்லியிலே இன்று நடைபெற்று முடிந்த மதக்கலவரத்தை அப்படியே பதிவு செய்தார்களோ என்ற எண்ணத்தைப் படம் தோற்றுவித்து விடுகிறது. சமகால அரசியலைப் பற்றி இவ்வளவு ஆழமான கருத்துகளைச் சொன்ன படம் வேறு இல்லை என்று கூறமுடியும்.

கலையும் அரசியலையும் எவ்வாறு இணைந்து செயல்பட வைக்க வேண்டியதை கதை வலியுறுத்துகிறது. இசையின் மூலம் மனிதத்தை நிறுவி அதிகாரத்தை சுக்குநூறாக தகர்த்தெறியும் காட்சிகள் நம் கண்களில் கண்ணீர் வரவழைத்து விடுகிறது உன்னுடைய துப்பாக்கிகளும் தோட்டாக்களும் என்ன செய்ய முடியும் என்ற கேள்வியை மிக அழுத்தமாக இயக்குநர் பதிவு செய்திருக்கிறார்.

கம்யூனிஸ்ட்களின் உறுதியான போராட்டத்திற்குப் படம் தனி கௌரவத்தை படம் வழங்கியுள்ளது.

Leave a Response