தமிழக முதல்வருக்கு பிறப்புச் சான்று இல்லை ரஜினியும் முகாமுக்குச் செல்வார் – சீமான் அதிரடி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் தென்னூர் உழவர்சந்தை மைதான திடலுக்கு நேற்று மாலை வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது…

ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றி விட்டார், சந்திரசேகர ராவும் தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று கூறி விட்டார்.

ஏற்கெனவே 11 மாநிலங்கள் அறிவித்து விட்டார்கள். தயங்காமல் நம் முதல்வரும் இதனை நிறைவேற்ற வேண்டும், இதைத்தான் நான் அவரைச் சந்திக்கும் போதும் கோரிக்கை வைத்தேன். அவர் என்ன சொன்னார் என்றால் ‘எனக்குக் கூட பிறந்தநாள் சான்றிதழ் இல்லை, அது சிரமம்தான், நிரூபிக்கறது கஷ்டம்தான்’ என்றார்.

இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் எதிரானது. நம்ம இவ்வளவு கேட்கிறோம் அல்லவா? பிரதமரிடம் பிறப்புச் சான்றிதழ் இருக்கா? நாட்டின் முதல் குடிமகன் கிட்டயே இருக்காது.இந்தியாவில் தற்போது படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடையாது. நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை திசை திருப்பவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள்.

1969-க்குப் பிறகுதான் பிறப்பு பதிவு செய்யப்பட்டு வருகிறது. 69-க்கு முன்னால் பிறந்த, என் அப்பாவுக்கெல்லாம் என்ன இருக்கும்? என் அம்மாவுக்கு எப்படி இருக்கும். நான் என்னுடைய பிறப்புச் சான்றிதழோடு, என் தாய் தந்தை பிறப்புச் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். அவர்களிடம் இருக்க வாய்ப்பில்லை, அப்போது நான் இந்தியக் குடிமகன் ஆக முடியாது, அவர்களும் ஆக முடியாது.

இனிமேல் இந்தியாவுக்குள் வருபவர்களை வேண்டுமானால் தடுக்க நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் ஏற்கனவே வந்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக இங்கேயே வாழ்ந்து வருபவர்களிடம் ஆதாரத்தைக் கேட்பது தேவையற்றது. இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தால் ரஜினியும் முகாமிற்குத் தான் செல்ல வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வரும் 21-ந் தேதி சென்னையில் நடைபெறும் பேரணிக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response