இன்குலாபை இழிவுபடுத்துவதா? – ஜெயமோகனை வறுத்த பேராசிரியர் ராஜநாயகம்

இன்குலாபுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பதைத் தொடர்ந்து ஜெயமோகன் தெரிவித்தக் கருத்துக்குக் கண்டனங்கள் குவிகின்றன.

இது தொடர்பாக பேராசிரியர் ச.ராஜநாயகம் எழுதியுள்ள பதிவில்…

கண்டனத்துக்கு உரிய ஜெயமோகம்!

இன்குலாப். கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர், பேராசிரியர் என்பதையெல்லாம் தாண்டி, அவர் ஓர் அற்புதமான மனிதர். மனித உரிமைகளை உயர்த்திப் பிடித்ததற்காகவே சொந்த வாழ்க்கையில் பலவற்றை இழக்கத் துணிந்தவர். மனித உறவுகளை போற்றிப் பேணியவர். மனிதத்தின் மீது பேரன்பு செலுத்தியவர்.

அவருடைய இந்தப் பேரன்புதான் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, கோபமாய் கிண்டலாய் கரிசனமாய் காதலாய்… எனப் பல்வேறு உணர்ச்சிகளாய் வெளிப்பட்டது.
இந்தப் பேரன்புதான் கவிதை கட்டுரை நாடகம் என இலக்கிய வடிவங்களைத் தேவைக்கேற்பத் தானே தேர்ந்துகொண்டது.

அவருடைய எழுத்து காசுக்காகவோ சினிமா வெளிச்சத்துக்காகவோ ஒருக்காலும் சோரம் போனதில்லை. விருதுகளின் வரம்புகளைக் கடந்து, விளிம்புநிலை மக்களுக்காகவே அவர் எழுத்து இருந்தது. அவர் இருப்பும் இருந்தது.

இன்குலாப் என்ற உன்னதமான மனிதரை, கவிஞரை இழிவுபடுத்தும் வண்ணம் ஜெயமோகன் சொல்லியிருப்பவை கண்டனத்துக்கு உரியவை.

ஜெயமோகன்,
நீங்கள் ஒருமுறை இன்குலாபை அவருடைய இல்லத்தில் சந்தித்திருந்தால், இப்படிச் சொல்லியிருக்க மாட்டீர்கள்.
இனி அதற்கு வாய்ப்பில்லை என்பதால், அவருடைய படைப்புக்களை மற்றொருமுறை வாசித்துப் பாருங்கள். காவி / சிவப்பு / கருப்பு… கண்ணாடி அணியாமல்.

Leave a Response