நடிகைகளை இழிவுபடுத்திய எழுத்தாளர் – வெடிக்கும் சர்ச்சை

நடிகைகள் குறித்து அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரையில்….

“உன்கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்” என்று வைஜூ மேலே ஆம்புளைச்சட்டை போட்டுக்கொண்டு ஓர் ஆட்டம் ஆடியது. தாத்தாக்கள் ஈரக்கனிவு கொண்டார்கள்.”

“கட்டிக்கொடுத்தால் எட்டு பெற்றுத்தள்ளும் உடலிருந்தாலும் “ஆப்பா! நான் வெந்திட்டேன்!” என கத்தியபடி டென்னிஸ் பேட்டுடன் ஓடிவந்து வயோதிகரின் சோபா விளிம்பில் தாவி அமரும். விழிகளை படபடவென அடித்துக்கொண்டு “அப்படித்தான் சொல்லுவேன்” என்று தலையை ஆட்டி ஆட்டி பேசும். ”

“சரோஜாதேவிக்கு இடப்பக்கமாகக் கோணும் வாய் என்றால் ஜோதிகாவுக்கு வலப்பக்கமாக. மொத்தமாக இழுபட்டு விரிந்தால் குஷ்பு. நடுவே பல்லில் இடைவெளி இருந்தால் தேவிகா.”

“சுட்டிப்ப்ப்பெண்கள் வழக்கம்போல இருஇனம். நாட்டுவகைகள் செந்தூரப்பூவே என கண்ணைச்சிமிட்டும், தாவணிபோட்டு கரும்பு கடித்து துள்ளி அலையும். ஹைபிரீட் என்றால் ”சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு” என்று துள்ளிக்கொண்டு அலையும். ஏழை எளியவர்களுடன் மழைநடனம் ஆடும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நாட்டுவகைகள் அழிந்துகொண்டிருக்கின்றன. மெரினாவில் மெழுகுவத்திகளுடன் கூடவேண்டிய காலம் நெருங்கிவருகிறது.”

இப்படியெல்லாம் எழுதியிருந்தார்.

இதற்குக் கடும் விமர்சனங்கள் வருகின்றன. இதுதொடர்பாக விலாசினிரமணியின் விமர்சனம்…..

இந்த இரவில் ஜெயமோகனின் இவ்வார்த்தைகளை வாசிப்பதைவிடவும் துர்பாக்கியம் வேறில்லை. தமிழ் சினிமாவின் மரியாதைக்குரிய ஆளுமையாக அறியப்பட்ட வைஜயந்திமாலா ஜெயமோகனுக்கு ‘அஃறிணை’யான கொடுமையை, அதுவும் இத்தனை தசாப்தங்களுக்குப் பிறகு, யாராவது கேள்வி கேட்டுவிடமுடியுமா என்ன? ஏனென்றால் அவர் இலக்கிய பிதாமகர் ஆயிற்றே.

வைஜெயந்திமாலா மட்டுமா, ‘நடிகை’கள் என்பவர்கள் (அதென்ன நடிகை? நடிகர் என்றால் பற்கள் சுளுக்கிக்கொள்ளுமா? ) சமுதாயத்தின் மற்ற பெண்களுக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச மரியாதைகூட கிடைக்கத் தகாதவர்கள் என்பது பொதுபுத்தியில் மட்டுமல்ல ஜெயமோகன் போன்ற ‘சிந்தனை’யாளர்களிடமும் இருக்கும் அழுகிய ஆண் திமிர்.

இது வெளிப்படுத்தும் பெண் வெறுப்பை நினைக்க நினைக்கக் கண்களில் கண்ணீர் முட்டுகிறது. ஒரு மரியாதைக்குரிய எழுத்தாளுமையின் எழுத்துகள் இவை. பார்த்துக்கொள்ளுங்கள்.

Leave a Response