மருத்துவர் இராமதாசு சொன்னபடியே நடக்கிறது – ஆர்.கே நகர் தேர்தல் தேதி அறிவிப்பு

முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு டிசம்பர் 31–ந்தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாளாகும். டிசம்பர் 5 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற 7 ஆம் தேதி கடைசி நாளாகும்.

டிசம்பர் 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிமுக அணிகளுக்குள்ளான மோதலில் முடக்கிவைக்கப்பட்டிருந்த இரட்டைஇலை சின்னம் எடப்பாடி அணிக்கு என்று தேர்தல் ஆணையம் அறிவித்து ஒருநாள் கூட ஆகவில்லை.உடனே தேர்தல் அறிவிப்பு வருகிறது.

இரட்டைஇலை எடப்பாடிக்கு ஒதுக்கப்பட்ட செய்தி வந்தவுடனே பாமக நிறுவனர் இராமதாசு,

ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு: அப்புறமென்ன… இனி ஆர்.கே. நகர் தேர்தல் அவசரமாக நடத்தப்படும். உள்ளாட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்படும்! என்று சொல்லியிருந்தார். அவர் சொன்னது அட்சரம் பிசகாமல் நடந்துவிட்டது.

இப்போது தேர்தல் அறிவிப்பு வந்தவுடன்,

நேற்று இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு. இன்று ஆர்.கே நகர் தேர்தல் அறிவிப்பு. ஏற்கனவே நான் கூறியது தான். நல்ல நாடகம் இங்கே நடக்குது! என்று இராமதாசு சொல்லியிருக்கிறார்.

Leave a Response