‘அறம்’ தமிழில் முக்கியமான சினிமாதான்.
ஆனால் அதன் கச்சிதக்குறைவும் அரசியல் கூர்மைக்குறைவும் அதை முழுமையான சினிமாவாக மாற்றவிடாமல் தடுத்திருக்கிறது. தொலைக்காட்சி விவாதம், அரசியல் கருத்துகளை நேரடியான வசனங்கள் மூலம் கடத்துவது, அரசியல்வாதிகள் குறித்த தட்டையான சித்தரிப்பு, வேல.ராமமூர்த்தி வரும் காட்சிகளில் செயற்கைத்தனம் ஆகியவை ‘அறம்’ படத்தின் பலவீனங்கள்.
திரைக்கதையின் தர்க்கம் அரசியல்வாதிகள் x அதிகாரிகள் என்ற முரணைக் கட்டமைத்து, ‘அரசியல்வாதிகள்தான் மோசம், அதிகாரிகள் நல்லவர்கள்’ என்ற முரணைக் கட்டமைத்துவிடும் அபாயம் இருக்கிறது.
இந்தத் தர்க்கம் வேல.ராமமூர்த்தி காட்சிகள் மற்றும் நயன்தாரா விசாரணைக் காட்சிகளில் செயற்படுவதாலேயே கொஞ்சம் விஜயகாந்த் சினிமாத்தனம் வந்துவிடுகிறது.
இப்படிப்பட்ட குறைகளை ஒதுக்கிவிட்டு, தேசபக்தி, வளர்ச்சி அரசியல், வல்லரசுப் பிம்பங்கள் ஆகியவற்றின் மோசடிகளைத் தோலுரித்த வகையில் ‘அறம்’ குறிப்பிடத்தகுந்த சினிமா.
ஒரு சுவாரஸ்யமான முரண். ஜனநாதனின் ‘பேராண்மை’, ராஜுமுருகனின் ‘ஜோக்கர்’, கோபியின் ‘அறம்’ மூன்றுமே மக்கள் அரசியல் என்பதை மய்யப்படுத்திப் பேசிய சினிமாக்கள். ஆனால் ‘பேராண்மை’ இந்தியா ஏவும் ராக்கெட்டைக் காப்பாற்ற நினைக்க, ஜோக்கரும் அறமும் அதன் முரண் அரசியலை அம்பலப்படுத்துகின்றன.
அதிலும் குறிப்பாக வானை நோக்கி ஏவப்படும் ராக்கெட், பூமிக்குக் கீழான ஆழ்துளைக்கிணறு என்ற இருமை எதிர்வுக் குறியீடுகள் அற்புதம்.
– சுகுணாதிவாகர்