மூக்குத்தி அம்மன் படம் தொடர்பாக தீக்கதிர் குமரேசன் எழுதியுள்ள பதிவு…..
எனது கருத்துகளை மதிக்கிற, விமர்சிக்கவும் தயங்காத நண்பர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அத்தகையவர்களிடமிருந்து வந்த ஒரு கேள்வி: “என்ன மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை வரவேற்று எழுதிவிட்டீர்கள்?”
அவர்கள் சுட்டிக்காட்டிய விசயங்களுக்காகப் படத்தை மறுபடியும் பார்த்தேன். படம் பற்றிய எனது பொதுவான வரவேற்பை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை என்ற முடிவுக்கே வந்தேன். அதேவேளையில், முதல் முறை பார்த்தபோது இதையெல்லாம் கவனிக்கத் தவறிவிட்டோமே என்ற எண்ணமும் ஏற்பட்டது.
கடவுள் மறுப்புப் பரப்புரை மேடை நிகழ்வில், கறுப்புச்சட்டைக்காரர் “நான் மசூதியில் கஞ்சி குடிப்பேன், சர்ச்சில் அப்பம் சாப்பிடுவேன், ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ் குடிக்கமாட்டேன்” என்று பேசுவதாக ஒரு காட்சி வருகிறது. அதற்குப் பிறகுதான் அந்த அம்மன், “கடவுள் இல்லைன்னு சொல்றவங்களால பிரச்சினை இல்லை, நான்தான் கடவுள்னு சொல்றாங்களே அவங்கதான் பிரச்சினை” என்று சொல்கிற காட்சி வருகிறது. அம்மன் இவ்வாறு சொன்னது மனதில் பதிய, முந்தைய காட்சியின் வசனத்தை உள்வாங்கத் தவறியிருக்கிறேன். அதை அப்போதே உள்வாங்கியிருந்தால், விரைவாகக் கட்டுரையை எழுதி அனுப்ப வேண்டியிருந்த வேகத்திலும் அது பற்றிய விமர்சனத்தைச் சேர்த்திருப்பேன்.
நாத்திகப் பரப்புரை செய்கிறவர்கள் இப்படி மசூதியில் கஞ்சி குடிப்போம், சர்ச்சில் அப்பம் சாப்பிடுவேன், அம்மன் கோயிலில் கூழ் குடிக்கமாட்டோம் என்று பேசியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. அப்படியே பேசியிருந்தாலும் அதற்கான விளக்கத்தைச் சொல்லியிருப்பார்கள். அதைத் தவிர்த்துவிட்டு இந்த வரிகளை மட்டும் வசனமாக வைப்பதில் நிச்சயமாக நேர்மையில்லை, ஆர்.ஜே.பாலாஜி.
பகுத்தறிவுப் பரப்புரை செய்கிறவர்கள் மற்ற மதங்களில் நடப்பது பற்றிப் பேசுவதில்லை என்று வேறொரு மதம் சார்ந்தவர்கள் சொல்வதாக அந்தக் காட்சியை அமைக்கவில்லை, பரப்புரையில் ஈடுபடுகிறவர்களே அப்படிச் சொல்வதாகக் காட்டுவது புரிதலின்மையாலா, திட்டமிட்ட உள்நோக்கத்துடனா?
ஒரு சிறுபான்மை மதத்தினரின் அற்புத மகிமைக் கூட்டம் பற்றிய காட்சி ட்ரெய்லரில் இருந்தது, எதிர்ப்பு வந்ததால் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது என்று சில நண்பர்கள் தெரிவித்தார்கள். ஒரு நண்பர் நீக்கப்பட்ட அந்தக் காட்சியை முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
ஒருவேளை கறுப்புச் சட்டைக்காரர்களின் அந்தக் கூட்டம் பற்றிய காட்சியும் ட்ரெய்லரில் இடம்பெற்று, அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தால், அதையும் நீக்கியிருப்பீர்களா பாலாஜி?
எந்த மதத்தையும் பின்பற்றுகிறவர்களுடைய உரிமைகளுக்காக நிற்கிற அதேவேளையில், எந்த மதமானாலும் அநீதிகள் நிகழ்கிறபோது மௌனமாக இருக்கக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு. சீர்திருத்தங்களுக்கும் மாற்றங்களுக்குமான குரல்கள், மதங்களிலிருந்து விடுவித்துக்கொண்டவர்களிடமிருந்து மட்டுமல்லாமல், அந்தந்த மதங்களைச் சார்ந்தவர்களிடமிருந்தேயும் ஒலிக்க வேண்டும்.
அத்தகைய ஒரு குரலாக இது போன்ற படங்களை எடுத்துக்கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை. ஆனால், கார்ப்பரேட் விவகாரம் ஒன்றைச் சொல்வதானாலும் சமூகநீதி பற்றிப் பேசினாலும், பகுத்தறிவுக்காக வாதிட்டாலும் ஒரு சினிமாவே முழுப் புரட்சியையும் செய்துவிட வேண்டும் என்பது போல நிராகரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இப்படியான படங்கள் வெகுமக்களிடையே கொண்டுசெல்கிற செய்திகளைப் பயன்படுத்திக்கொண்டு, அடுத்த கட்ட மாற்றங்களுக்கான பரப்புரைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்வது அதில் அக்கறையுள்ள இயக்கங்கங்களின் பணி.
மதம் வெகுமக்களின் அபின் என்று சொன்ன கார்ல் மார்க்ஸ், அது ஆத்ம உயிர்ப்பற்ற உலகின் உயிர்ப்பாக, இதயமற்ற உலகத்தின் இதயமாக, ஒடுக்கப்பட்ட மனிதரின் பெருமூச்சாக இருக்கிறது என்றும் கூறினார். மார்க்ஸ் சொன்னதற்காக அல்ல, எனது புரிதலிலிருந்தும் சொல்கிறேன் – ஒடுக்குமுறைகள் ஒழியும் வரையில், கழற்றிவிட்ட இதயத்தை உலகம் மறுபடி பொருத்திக்கொள்கிற வரையில் கடவுள் நம்பிக்கை ஏதாவது ஒரு வடிவத்தில் தொடரும். மாற்றங்களுக்கான எழுச்சிகள் வெடிக்கிறபோது கூட, அவரவர் மதம் சொல்கிற கடவுளிடம் புரட்சி வெற்றிபெற வேண்டிக்கொண்டு கலந்துகொள்ள வருகிறவர்கள் இருப்பார்கள்.
வரட்டும். உலகில் பெரும்பான்மையாக இருக்கிற அவர்களும் வருகிறபோதுதான் அடிப்படை மாற்றங்கள் உறுதியாகும். உலகத்திற்கு இதயத்தைப் பொருத்துகிற மாற்றங்கள் நிலைபெற்ற பிறகும் கூட, அதனால் கிடைத்த அச்சமற்ற வாழ்க்கை தொடர வேண்டுமேயென்ற வேண்டுதல்களோடு அப்பாற்பட்டதொரு சக்தி என்று கூறப்படுவதன் மீதான நம்பிக்கைகள் தொடரும். அறிவியல் கண்ணோட்டம் மேலோங்க மேலோங்க, நாளைய வாழ்க்கை பற்றிய நம்பிக்கை உறுதிப்பட உறுதிப்பட, கடவுள் கருத்தாக்கமும் வேண்டுதல் வழிபாடுகளும் படிப்படியாக உதிரும்.
விமர்சனத்தின் மீதான விமர்சனத்திற்கான பதிலோடு இந்தச் சிந்தனைகளையும பகிர்ந்துகொள்ளத் தூண்டிய நண்பர்களுக்கு நன்றி.
-குமரேசன்