மகள் திருமண வரவேற்புக்கு வந்த ரசிகர்களை விக்ரம் எப்படி நடத்தினார் தெரியுமா?

நடிகர் விக்ரம் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்துவின் மகள் வயிற்றுப்பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் மகனுமான மனுரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் திருமண வரவேற்பு நடைபெற்றது.புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது.

இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், கெவின் கேர் குழும ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ச ராமதாஸ், எம் ஆர் கே பன்னீர் செல்வம்,க.பொன்முடி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

இவர்களுடன் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து மூவாயிரத்திற்கும் அதிகமான விக்ரமின் ரசிகர்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

விக்ரமின் ரசிகர்கள் அனைவரும் மேடையேறி மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது.

ஏனைய நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்களை இது போன்ற வைபவங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். அவர்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்வார்கள். அவர்களில் ஒருசிலருக்கு மட்டுமே மேடையேறி வாழ்த்துச் சொல்லும் பாக்கியம் கிடைக்கும். ஆனால் விக்ரம், தன்னுடைய ரசிகர்கள் அனைவரையும் மேடையேற்றி, வாழ்த்துச் சொல்ல அனுமதித்தார். இதன் மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்து, வரிசையில் நின்று மண்மக்களைச் சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்து சந்தோஷமடைந்தனர்.

அத்துடன் தங்களின் கனவை நிறைவேற்றியதற்காகவும், தங்களையும் ஒரு பிரபலமான நட்சத்திரங்களைப் போல் மதிப்பளித்ததற்காகவும், இதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்ததற்காகவும்,விக்ரம், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் ஆகியோரை ரசிகர்கள் மனதாரப் பாராட்டினர்.

வரவேற்பு நிகழ்வின்போது, ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பலத்த ஆரவாரங்களுக்கிடையே ஓ பட்டர்ஃப்ளை பாடலை பாடினார் விக்ரம்

தமிழ்த் திரையுலகில் விக்ரமின் நடிப்பு எப்படி தனித்துவம் மிக்கதோ, அதே போல் அவருடைய மகளின் திருமண வரவேற்பில் ரசிகர்களையும் வரவழைத்து, அவர்களையும் கௌரவித்ததன் மூலம் சொந்த வாழ்க்கையிலும் விக்ரம், தனித்தன்மையுடைய மனிதநேயப் பண்பாளர் என்பதை நிரூபித்துவிட்டார் என்று பலரும் இணையப்பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

விக்ரம் மிகச்சிறந்த ஒரு முன்னூதாரணத்தை உருவாக்கியிருக்கிறார் என்கிறார்கள் திரையுலகினர்.உண்மைதான்.

Leave a Response