வேலையில்லாப் பட்டதாரி 2 – திரைப்பட விமர்சனம்


தனுஷ், அமலாபால் இந்தப் பாகத்தில் கணவன் மனைவி. குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் அக்கறை காட்டும் குடும்பப் பெண்ணாக அமலாபால் வருகிறார்.

தனுஷ், கிடைத்த கட்டிடப் பணியை சரியாகச் செய்து கொடுத்ததால், அவர் பணிபுரியும் நிறுவனத்துக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கிறது.

தென்னிந்தியாவில் கட்டிடத் தொழிலில் சாதனை படைப்போருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. இதில் அனைத்து வகையான விருதுகளையும் தென்னிந்தியாவிலேயே பெரிய கட்டிட நிறுவனமான கஜோலின் கட்டிட நிறுவனம் கைப்பற்றுகிறது. ஆனால் சிறந்த பொறியாளருக்கான விருது மட்டும் தனுஷ்க்கு கிடைத்து விடுகிறது.

சிறந்த பொறியாளருக்கான விருது வாங்கிய தனுஷை தன்னுடைய நிறுவனத்துக்கு இழுக்க முயற்சி செய்கிறார். அங்கு செல்ல விரும்பாத தனுஷ், கஜோலின் திமிர்ப் பேச்சாலும் அவருடன் பணிபுரிய மறுக்கிறார்.

சிக்கல் ஆரம்பம்.

தனுஷே தனது வேலையை ராஜினாமா செய்யும்படி ஆகிறது. அப்போது அவரை கஜோல் தனது நிறுவனத்தில் சேரச் சொல்ல, வேலையில்லாப் பட்டதாரி என்ற அடையாளத்துடனே தான் இருக்க விரும்புகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

சவால் ஆரம்பம்.

வேலையில்லாப் பட்டதாரி என்ற தனது அடையாளத்துடன் தனுஷ் என்ன செய்தார்? வேலையில்லாப் பட்டதாரியாக எப்படி சாதிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

தனுஷ் தனக்கே உரிய இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். முதல் பாகத்தை விட கொஞ்சம் அதிகமாகவே இருப்பதுதான் சோகம். அமலாபாலிடம் அடி வாங்குவது, கஜோலை எதிர்த்து நிற்பது ஆகிய இரு வகைகளிலும் வேறுபாடு காட்டி நடித்திருக்கிறார்.

அமலாபால் ஒரு மனைவியாகவும் குடும்பப் பெண்ணாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். தனுஷ் – அமலா பால் இடையேயான காதலும் ரசிக்கவைக்கிறது.

இருபது வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடித்திருக்கும் கஜோலுக்கு, அழுத்தமான கதாபாத்திரம். தொழிலில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற கர்வத்துடன் மிடுக்கும் சேர்த்து மிரள வைத்திருக்கிறார். அவருடைய அழகுக்கு இவ்வளவு கர்வம் இருப்பதில் தவறில்லை.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார்.தனுஷுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? கஜோல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதா? என்கிற தடுமாற்றம் தெரிகிறது.

கதாசிரியர் தனுஷ், கடைசியில் வார்தா புயலைப் பயன்படுத்தியிருப்பது அவ்வளவு ஈர்ப்பாக இல்லை.

ஷான் ரோல்டன் இசை. அனிருத் இல்லாத குறை தெரிகிறது. ஒளிப்பதிவில் சமீர் தாஹீர் நன்றாகப் பணியாற்றியிருக்கிறார்.

ஒன்றைப் பார்க்காமல் இரண்டைப் பார்ப்பவர்களுக்குக் குறையில்லை.

Leave a Response