நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரிராஜா இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு இருவரும் தங்கள் திருமண வாழ்வில் இருந்து பிரிந்து விட்டதாக சமூகவலை தளத்தில் பதிவிட்டனர்.
அதைத் தொடர்ந்து,தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க இரு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர்.
இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. முதலில் ஆறு மாத காலம் இருவருக்கும் அவகாசம் வழங்கி விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இருவரும் இரண்டு விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. எனவே வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
மீண்டும் நவம்பர் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் நேரில் ஆஜராகினர்.அப்போது பரஸ்பரம் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பதிவேட்டில் கையொப்பம் இட்டனர். பின்னர் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.
இந்த வழக்கில் நேற்று (நவம்பர் 27.2024 புதன்கிழமை) தீர்ப்பளித்த நீதிபதி சுபாதேவி இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும் 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி நடைபெற்ற திருமணப் பதிவை இரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார்.
இதனால் இருவரும் அதிகாரப்பூர்வமாகப் பிரிந்துள்ளனர்.