
இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்டதாகக் கூறிய முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் அமீத் அன்சாரி, இது தொடர்பாக நான் மோடி மற்றும் அமைச்சர்களிடம் கேள்வி கேட்டபோது அவர்கள் கூறிய பதில் மனவேதனைக்கு ஆளாக்கியது என்றும் கடந்த மூன்று ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
ஓய்வுபெற்ற குடியரசுத் துணை தலைவர் அமீத் அன்சாரி அரசு தொலைக்காட்சியான மாநிலங்களவை தொலைக்காட்சியில் புதன் அன்று நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
அப்போது..
கடந்த மூன்று ஆண்டுகளாக (பாஜக ஆட்சிக்கு வந்தது முதல்) இஸ்லாமியர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுக்கொண்டு வருகின்றனர். பா.ஜ.க. ஆட்சி அரியணையில் ஏறியது முதல் இஸ்லாமியர்கள் ஒரு வித அச்ச உணர்வுடன் இருந்தனர். இந்த அச்ச உணர்வு இந்த ஆட்சியின் தொடர்ச்சியில் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. நாளுக்கு நாள் சூழல் மோசமாகத் தான் ஆகிக்கொண்டிருக்கிறது.
மேலும் சமூகத்தில் மதச்சார்பின்மை மிகவும் குறைந்துவிட்டது, மதரீதியான உணர்வுகள் தூண்டப்பட்டு அமைதி குலைந்து வருகிறது. சமூகத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது கண் கூடாகத் தெரிகிறது, இன்றைய நிலையில் மதரீதியாக தேசபக்தி பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட மதத்தவர்கள் அனைவருமே தேச பக்தி இல்லாதவர்கள் என்ற ஒரு போலியை சிலர் உருவாக்கிவிட்டனர். தேச பக்தி என்பது அனைத்து இடங்களிலும் கேள்விக்குள்ளாக்கவேண்டும் என்பது அவசியமில்லை.
நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து வரும் தாக்குதல்கள் மற்றும் சிறுபான்மையினர்கள் கொல்லப்படுவது குறித்து மோடி மற்றும் அமைச்சர்களிடம் நான் பேசினேன், ஆனால் அதற்கு அவர்கள் கூறிய பதில் என்னை மன வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. இந்த இடத்தில் அவர்கள் கூறிய பதிலை, நான் வெளிப்படையாகக் கூறுவது ஜனநாயக மரபிற்கு எதிரானது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த இந்த மூன்றாண்டுகளில் நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது வெளிப்படையான ஒன்று என்று அமீத் அன்சாரி கூறினார்.


