இவன் தந்திரன் – திரைவிமர்சனம்

பொறியியல் படித்த நாயகன் கவுதம் கார்த்திக்,அவரது நண்பன் ஆர்.ஜே.பாலாஜி ஆகிய இருவரும் சொந்தமாக படிப்பை ஒட்டிய வேலை செய்துவருகிறார்கள். அவர்களுக்கு அமைச்சர் சூப்பர்சுப்பராயனுடன் மோதல். அந்த மோதலுக்குக் கல்வியை கடைச்சரக்காக மாற்றும் போக்கே காரணம் என்று வைத்துக்கொண்டிருப்பதால் கதைக்குப் பலம் கிடைக்கிறது.

ஒரு சாமான்ய மனிதன் சர்வவல்லமை பொருந்திய அமைச்சரை எதிர்க்கும்போது என்ன்வெல்லாம் நடக்கும் என்பதையும் அதற்கு நடுவில் ஒரு காதலையும் கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் கண்ணன்.

நாயகன் கவுதம்கார்த்திக், இந்தப்படத்தில் கொஞ்சம் மெருகேறியிருக்கிறார். நாயகி ஷ்ரத்தா தமிழுக்கு முழுநீள புதுவரவு.
வசதி படைத்த குடும்பத்துப் பெண் போல நன்றாக இருக்கிறார். கொடுத்த வேலையைச் சரியாகச் செய்கிறார்.

நகைச்சுவைக்காக ஆர்.ஜே.பாலாஜி. அரசியல்வாதி வில்லன் மற்றும் கல்விக்கொள்ளை என்று வசமாக இரண்டு விசயங்கள் கிடைத்துவிட்டதால் இஷ்டத்துக்குப் பேசுகிறார். சில இடங்கள் சிரிக்கலாம்.

சண்டைப்பயிற்சியாளர்கள் சூப்பர் சுப்பராயன், ஸ்டன்ட் சில்வா ஆகிய இருவருமே பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

பிரசன்னகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் நன்றாக அமைந்திருக்கின்றன. தமனின் இசையில் இரண்டுபாடல்கள் இருக்கின்றன. பின்னணி இசை படத்திற்குப் பலம்.

சரியான கதை என்றாலும் அங்கங்கே திரைக்கதை தொய்வடைவது பலவீனம்.

இயக்குநர் கண்ணன் நாயகன் கவுதம்கார்த்திக் ஆகிய இருவரும் இந்தப்படத்தில் கரையேறுவார்கள் என்று நம்பலாம்.

Leave a Response