
பொதுவாக ஒருவருடைய பிறந்த நாளில் “ஹேப்பி பர்த் டே டூ யூ” என்ற ஆங்கிலப் பாடலைத்தான் பாடுவார்கள். இதற்கு இணையான தமிழ்ப் பாடல் இல்லாமல் இருந்தது. திரைப்படப் பாடலாசிரியர் அறிவுமதி “நீண்ட காலம், நீடு வாழ வேண்டும்…” என்ற பாடலை எழுதி அதனை தான் கலந்து கொள்ளும் பிறந்த நாள் விழாக்களில் பாடி வந்தார்.
இதைக் கேட்ட பலரும் இதனையே ஒரு இசை ஆல்பமாக வெளியிடுங்கள் என அறிவுமதியிடம் கோரிக்கை வைத்துவந்தார்கள். இதற்கு இசை வடிவம் கொடுக்க ‘பிசாசு’ பட இசை அமைப்பாளர் அரோல் கரோலி முன்வந்தார். சைவம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற பாடகி உத்திராவிடம் இந்த பாடலை பாடும் பொறுப்பு வழங்கப்பட்டது.
உத்ராவை ‘பிசாசு’ படத்தில் “நதி போகும் கூழாங்கல்…” என்ற பாடலை பாட வைத்தவர் அரோல் கரோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடந்த தமிழ்ச் சங்க பேரவை விழாவில் வெளியிடப்பட்டது. இனி பிறந்த நாட்களில் தமிழ் பாடல் ஒலிக்கட்டும் என அறிவுமதியும் இந்தப் பாடல் என் மகள் எனக்காகவே பாடியது போல இருக்கிறது என உத்ரா உன்னியின் தந்தையான பாடகர் உன்னி கிருஷ்ணனும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இந்தப் பாடல் இதுவரை இரண்டு கோடி பேருக்கும் மேல் இணையத்தில் கண்டு களித்திருக்கிறார்கள். தமிழர்கள் இல்லங்கள் தோறும் இப்பாடல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. நண்பர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்ப இந்தப் பாடல் வரிகளைப் பயன்படுத்துவதாகப் பலர் சொல்கின்றனர். தமிழகத்தில் பல பள்ளிகளில் இந்தப் பாடல் பாடப்பட்டு வருகிறது.
இந்தப் பாடலை ‘வலைத்தமிழ் டாட் காம்’ என்ற இணையதளத்தில் கேட்டு மகிழ்வதுடன். பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.


