
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று வெளியிட்டிருக்கும் சமுகவலைதளப் பதிவில்…
இலங்கை நாடாளுமன்ற எம்.பி திரு.இராமநாதன் அர்ச்சுனா அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக தலைமைச் செயலகம் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினேன். இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நல்லுறவு, தமிழ் மக்களின் நலன், மீனவர் பாதுகாப்பு, ஒன்றுபட்ட வளர்ச்சி ஆகிய விஷயங்கள் குறித்து நட்பு ரீதியாகக் கலந்துரையாடினோம். தமிழ் மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வருங்காலம் என்ற புள்ளியில் ஆரோக்கியமான உறவில் பயணிப்போம் என்று ஒருவொருக்கொருவர் தெரிவித்து மகிழ்ந்தோம்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இந்த இராமநாதன் அர்ச்சுனாவின் திடீர் தமிழ்நாடு வருகை பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இவர்,சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்ற பாராளுமன்ற உறுப்பினர்.ஆனால் இவருக்குப் பின்புலமாக தமிழினப்படுகொலையாளன் இராஜபக்சே குடும்பம் இருக்கிறது.அவர்கள் இயக்குகிறபடி இவர் ஆடிக்கொண்டிருக்கிறார்,தமிழ்ச் சமுதாயத்துக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகளை ஊதிப்பெரிதாக்கி பெரும் பிளவையும் பகையையும் உருவாக்கும் வேலைத்திட்டம் இவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டு உண்டு.
அதை மெய்ப்பிக்கிற மாதிரியே தமிழீழத்தில் இவருடைய நடவடிக்கைகள் அமைந்திருந்தன.
இப்போது அது தமிழ்நாட்டுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
யாரும் அழையாமலே தமிழ்நாடு வந்தவர், முதல்வர் விஜய்யைப் பார்க்கவேண்டும் என்று முயன்றிருக்கிறார்.அது நடக்கவில்லை என்றதும் ஆதவ் அர்ஜுனாவை பார்த்துவிட்டு வந்திருக்கிறார்.
வெளியில் வந்ததும், தேவையேயில்லாமல் சீமான் பற்றி எதிர்மறையாகப் பேட்டி கொடுத்தார்.
அதோடு நில்லாமல், விடுதலைச்சிறுத்தைகள் நடத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலும் அழையா விருந்தாளியாகப் பங்கேற்று அங்கும் தேவையில்லாமல் சீமான் பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசியலடிப்படையில் கருத்துவேறுபாடுகளுடன் இருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருக்கிடையே மோதலைத் தூண்டிவிடுவதாக அவருடைய பேச்சு அமைந்திருந்தது.
அர்ச்சுனாவின் பேச்சை திருமாவளவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பாக சீமான் குறித்த விமர்சனத்தை முற்றாக ஏற்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இவருடைய தமிழ்நாடு வருகை, தமிழ்நாட்டில் இருக்கும் தமிழீழ ஆதரவு சக்திகளிடையே மோதலை ஏற்படுத்தும் சிங்கள அரசின் சதியை அரங்கேற்றத்தான் என்று தமிழீழ ஊடகத்தினர் சொல்கிறார்கள்.
நடந்திருக்கிற நிகழ்வுகள் அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன.
– கதிர்


