
நியூட்ரினோ திட்டமும் சென்னை மீனாட்சி கல்லூரியும்:
இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வகத்தை எப்படியாவது தமிழ்நாட்டில் வைத்துவிட வேண்டும் என்று திட்டக் குழுவினர் துடியாகத் துடிக்கிறார்கள்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி பெண்கள் கல்லூரியில், நிர்வாகம் ஒரு வெள்ளைத் தாளில் மாணவிகளிடமும், ஆசிரியர்களிடமும் என்ன எதற்கு என்றே சொல்லாமல் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள், கையெழுத்து வாங்கி முடித்தவுடன் அத்துடன் நியூட்ரினோ திட்டம் குறித்து ஒரு கடிதம் இணைத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் கொண்டுவருவதற்கு சில அரசியல்வாதிகளும், செயல்பாட்டாளர்களும் (பூவுலகின் நண்பர்கள் போல்) எதிர்ப்பதாகவும் , இந்த எதிர்ப்பைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டதாகவும், இந்தத் திட்டத்தை வேறு ஒரு மாநிலத்திற்கு மாற்றுவதற்கு முயற்சிகள் நடப்பதால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அது தமிழகத்திற்கு பெரிய இழப்பாக இருக்கும் என்றும் அந்த கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் அடிப்படை அறிவியல் கூட தெரியாதவர்கள் என்றும், எப்படி இந்த செயல்பாட்டாளர்களால் இப்படி உண்மைகளை மாற்றிச் சொல்லமுடிகிறது என்பது பெரிய ஆச்சரியமாக உள்ளது என்றும் அதுவும் குறிப்பாக தமிழக மாணவர்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும் அடுக்கடுக்கான புகார்களை திட்டத்தை எதிர்ப்பவர்கள் மீது அந்த மனு சொல்லுகிறது.
இந்தத் திட்டத்தை தடுப்பவர்களின் மீது எல்லா விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு நியூட்ரினோ திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்கிறது அந்த கடிதம்.
ஒரு திட்டத்தை எதிர்ப்பவர்கள் மீது நடவடிக்கை கோரும் உரிமையை யார் மீனாட்சி கல்லூரிக்கு கொடுத்தது? அப்படி என்றால் இந்தத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று நாங்கள் நடவடிக்கை கோரலாமா?
கல்லூரியின் இந்த நடவடிக்கைக்கும் “பேட்டை ரௌடிகளின்” செயலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்க முடியாது. கல்லூரியில் அறிவியல்தான் சொல்லித்தருகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
உங்களுக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின், இந்துத்துவத்தின் ஒரு முகமாக செயல்பட ஆசை இருந்தால் அதை வேறு ஏதாவது மாநிலத்தில் கொண்டுபோய் வைத்து கொள்ளுங்கள், தமிழகத்தில் செய்ய நினைத்தால் தோல்வியே உங்களுக்கு மிஞ்சும்.
மீனாட்சி கல்லூரியில் படிக்கும் மாணவிகளே உங்கள் கல்லூரி நிர்வாகம் செய்யும் அராஜகங்களுக்கு நீங்கள் பொறுப்பு கிடையாது என்று எங்களுக்கு தெரியும், உண்மைகளை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள், அது போதும். – சுந்தரராஜன்


