
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும்.ஐ,பி,எல், நிர்வாகத்திற்கும். தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் காவிரி உரிமை மீட்பு குழுவின் வேண்டுகோள்.
காவிரியில் தமிழர்களின் உரிமை காக்கும் போராட்டம் ,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிக்கும் போராட்டம்,தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாழாக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தும் போராட்டம், மண்ணை மலடாக்கும் ஹைட்ரோகார்பனுக்கு எதிரான போராட்டம், மேற்கு தொடர்ச்சி மலை வளத்தை நாசம் செய்யப்போகும் நியூட்ரினோ போராட்டம் என தமிழகம் முழுவதும் இளைஞர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள்,அரசியல் கட்சியினர்,இயக்கங்கள்,ஆகிய அனைவரும் தன்னெழுச்சியாக எதிர்கால சந்ததியினருக்காக போராட்ட களத்திற்கு வந்து போராடிக்கொண்டிருக்கும் வேளையில்,
இந்த போராட்டங்களை மழுங்கடிக்கச்செய்யும் விதமாகவும்,மடைமாற்றம் செய்யும் விதமாகவும்,எதிர்வரும் 10 – 04- 2018,அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் ஐ,பி,எல்,கிரிக்கெட் போட்டி அமைந்துவிடக்கூடாது என்பதால் இந்திய கிரிக்கெட் வாரியமும், ஐ,பி,எல், நிர்வாகமும் எதிர்கால தமிழக சந்ததிகளின் நலனை முன்னிறுத்தி மேற்க்கண்ட போட்டியினை வேறு மாநிலத்திற்கு அல்லது வேறு தேதிக்கு தள்ளிவைக்க ஆவண செய்ய வேண்டுமென்று தமிழகத்தின் எதிர்கால சந்ததியினருக்காக போராட்ட களங்களில் பங்கேற்றுள்ள அனைவரின் சார்பாகவும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாகவும், காவிரி உரிமை மீட்பு குழுவின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.
இப்போட்டி எதிர்கால சந்ததியினரின் எதிர்கால உரிமை, ஆரோக்கிய வாழ்விற்கான மக்கள் போராட்டங்களை மடைமாற்றும் விதத்திலோ, மழுங்கடித்துவிடும் விதத்திலோ அமைந்துவிடக்கூடாதென்ற இனத்தின் மேல்கொண்ட அக்கறையால்தான் கேட்கிறோம். மற்றபடி நாங்கள் விளையாட்டுக்கு எதிரானவர்கள் கிடையாதென்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்!
அன்புடன் – தி.வேல்முருகன்.
ஒருங்கிணைப்பாளர்.
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு.


