வவுனியாவில் அரங்கு கொள்ளாத உழவர்பெருவிழா

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர்பெருவிழா 25.01.2015 ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபை
மண்டபத்தில் கோலாகலமாக நிகழ்ந்தேறியது.

வடக்கின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தையொட்டி உழவர்பெருவிழாவை நடாத்தி
வருகிறது. கடந்தவருடம் இவ்விழா கிளிநொச்சியில் இடம்பெற்றதையடுத்து இம்முறை வவுனியாவில் சிறப்பாகக்
கொண்டாடப்பட்டுள்ளது.

ஆராக்கியமானதும் சூழலுக்கு நட்பானதுமான முறைகளில் வீடுகளிலேயே உணவு உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் விவசாய அமைச்சால் ஆண்டுதோறும் போட்டிகள் நடாத்தப்படுகிறது. 2014ஆம் ஆண்டில் மாவட்டரீதியாக
வெற்றி ஈட்டிய சிறந்த வீட்டுத்தோட்டச் செய்கையாளர்கள், சிறந்த தானியப்பயிர்ச் செய்கையாளார்கள், சிறந்த
பாற்பசுப் பண்ணையாளர்கள், சிறந்த ஆடு வளர்ப்பாளார்கள் மற்றும் சிறந்த கோழி வளர்ப்பாளர்கள் இவ்விழாவில் விருதுகள் வழங்கிக் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வடக்கு முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் முதன்மை விருந்தினராகவும், யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் தலைவர் முனைவர் சிவமதி சிவச்சந்திரன், வன்னிமாவட்ட நாடளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், விநோநோகராதலிங்கம்,மாகாணசபை அமைச்சர்கள் த.குருகுலராஜா, ப.சத்தியலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டிருந்தார்கள்.

அரங்கு கொள்ளாத அளவுக்குப் பார்வையாளார்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் கலைமாமணி அருந்தவநாயகம் சுஜேந்திராவின் நெறியாள்கையில் வவுனியா நிருத்திய நிகேதன கலாமன்ற மாணவர்களின் நடன நிகழ்ச்சிகளும் அருணா – கேதீஸ் குழுவினரின் நம்தேசக் காற்று என்ற நாட்டார் இசையரங்கும் இடம்பெற்றன.

Leave a Response