ரஜினிக்குப் பிறகு சிவாஜி- வேந்தர் தொலைக்காட்சி செய்வது சரியா?


வேந்தர் தொலைக்காட்சியில், ஞாயிறு தோறும் பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘தடம் பதித்தவர்கள்’. தொழில்துறையில் தடம் பதித்து சாதனை புரிந்தவர்களைப் பற்றி, அவர்கள் அந்தத் துறையில் முன்னேறி எப்படி சாதனை படைத்தார்கள் என்ற வரலாறு ஆரம்பத்தில் ஒளிபரப்பாகியது.
தற்போது, திரைத்துறையில் தடம்பதித்து, மக்கள் மனதில் இன்றும் நீங்காமல் இருக்கும் கலைஞர்களைப் பற்றிய வரலாறைத் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முதலில் எம்.ஜி.ஆரின் சாதனைகள், அவரைப் பற்றி பிரபலங்கள் பேசியது ஆகியனவற்றையும் அதன்பின் ரஜினியின் சாதனைகளை ஒளிபரப்பியிருக்கின்றனர். ரஜினிக்குப் பிறகு, தற்போது சிவாஜியின் சாதனைகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து சிவாஜியின் சாதனைகளை ஒளிபரப்பியிருந்தால் சரி. அவருக்குப் பின் ரஜினி, அதற்கடுத்து சிவாஜி என்பது எப்படிச் சரியான வரிசைப் படுத்தலாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
சிவாஜி பற்றிய நிகழ்ச்சியில். சிவாஜியை அறிஞர் அண்ணா பாராட்டியது, சிவாஜியின் தாயார் ராஜாமணி அம்மாளின் மறைவு மற்றும் நடிகர் திலகத்தின் சாதனைப் படங்களான தில்லானா மோகனாம்பாள், மகாகவி காளிதாஸ், உயர்ந்த மனிதன் ஆகியவை பற்றியும் வருகிற ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 1 அன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இதன் மறுஒளிபரப்பை, வரும் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு கண்டு ரசிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

Leave a Response