என் மீது அன்பு கொண்ட கவிஞர் பற்றி எதுவும் சொல்ல மறுக்கும் அரசு -ஓர் அமைச்சரின் வேதனை

2009 ஆம் ஆண்டு நடந்த போரின்போது, சிங்கள இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஏராளமான போராளிகள் பற்றி இதுவரை எந்தத்தகவலும் இல்லை.இந்த விசயத்தில் காணாமல் போனவர்களின் உறவுகளை மட்டுமின்றி சர்வதேசத்தையும் சிங்கள அரசு ஏமாற்றிவருகிறது. இதற்குச் சான்றாக தமிழ்மாகாணத்தில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும் பொ.ஐங்கரநேசனின் பதிவு அமைந்திருக்கிறது. மார்ச் 29 ஆம் நாளன்று அவருடைய முகநூல் பதிவில்,

காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் சிலரை கௌரவ முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் 28.03.2017 அன்று தனது அலுவலகத்தில் சந்தித்துக்கலந்துரையாடியிருந்தார்.

அப்போது ஒருவர் யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக முன்னர் இருந்த இளம்பருதி அவர்களைப் படையினருடன்2013ஆம் ஆண்டு கண்டதற்கான நம்பகமான சாட்சியங்கள் இருப்பதாகச் சொன்னார். எனது ஆசிரிய நண்பர் ஒருவரும் தான் இளம்பருதி அவர்களை யாழ்ப்பாணத்தில் படையினரின் வாகனத்தில் கண்டதாக என்னிடம் தெரிவித்திருக்கிறார்.

கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களை அவரது துணைவியார் வட்டுவாகலில் படையினரிடம் சரணடைவதற்காகக் கையளித்துள்ளார். அவரை பின்னர் கொழும்பில் ஒரு இடத்தில் தான் கண்டதாக என்னுடைய நண்பர் ஒருவர் என்னிடம் தெரிவித்திருக்கிறார்.

படையினரிடம் போராளிகளைக் கையளித்த அவர்களது உறவினர்கள் இன்னமும் இங்கேதான் இருக்கிறார்கள். கண்கண்ட சாட்சியங்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகப் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும்.

புதுவை இரத்தினதுரை அவர்களின்பால்அவரது கரகர கவித்துவக் குரல் காரணமாக என் சிறுவயது முதலே வசீகரிக்கப்பட்டவன் நான். எப்போதும் என்மீது அன்பும் கரிசனையும் கொண்டிருந்தவர் அவர்.

அவருடைய குடும்பத்தார் அவருடைய விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்குமாறுகோரி என்னிடம் கடிதம் ஒன்றைத் தந்து வைத்திருந்தனர். மார்ச் 03, 2015இல் ஜனாதிபதி அவர்கள் யாழ் மாவட்டச் செயலகத்துக்கு வந்தபோது அக்கடிதத்தை அவரிடம் கையளித்திருந்தேன்.

கூடவே இன்னுமொரு பொதுமகன், தனது தனிப்பட்ட விடயமாகத் தந்த கடிதம் ஒன்றையும் அவரிடம் கையளித்திருந்தேன். அப்பொதுமகனின் கடிதத்துக்கான பதில் அவருக்கு ஜனாதிபதியின் செயலகத்தில் இருந்து பின்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் புதுவை இரத்தினதுரை அவர்கள் தொடர்பாக நான் கையளித்த கடிதத்துக்கு இதுவரையில் எவ்வித பதிலும் இல்லை. இப்படித்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அரசு தொடர்ந்தும் மௌனத்தையே பதிலாகத் தந்துகொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Response