சிங்கள அரசின் சதியை மீறி தமிழர்களாக ஒருங்கிணைவோம் – பொ.ஐங்கரநேசன் அழைப்பு

அரசியல்வாதிகள் இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைத்தாலும்
நியாயமான இலட்சியங்கள் ஒருபோதும் சாவதில்லை!
பொ.ஐங்கரநேசன் ஆணித்தரம்.

விடுதலை அரசியலுக்கும் தேர்தல் அரசியலுக்கும் இடையில் பலவேறுபாடுகள் உள்ளன. விடுதலை அரசியலில் இலட்சியத்துக்காகப் போராளிகள் உயிர்துறக்கவும் தயங்கமாட்டார்கள். ஆனால், தேர்தல் அரசியலில் அரசியல்வாதிகள் நாற்காலிகளுக்காக இலட்சியங்களைக் குழிதோண்டிப் புதைக்கவும் தயங்கமாட்டார்கள். ஆனால், எவ்வளவுதான் ஆழக்குழிதோண்டிப் புதைத்தாலும் நியாயமான இலட்சியங்கள் ஒருபோதும் சாவதில்லை என்று தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

கொக்குவில் நேதாஜி சனசமூகநிலையத்தின் ஆண்டுவிழா நேற்று சனிக்கிழமை (07-04-2018) நிலைய முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஆயுதரீதியாக முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பல அரசியல்வாதிகள் தமிழ்த்தேசிய அரசியலில் இருந்து வழுவ ஆரம்பித்துவிட்டார்கள். தாங்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்து, வதைபட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் புறந்துள்ளி இலங்கைத் தேசியத்துக்குள் கரைய ஆரம்பித்துவிட்டார்கள்.

நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பலர் இலட்சியங்களைக் கைவிட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.
எமது தலைவர்கள் நேற்றுவரை எவரையெல்லாம் துரோகிகளாக விமர்சித்தார்களோ இன்று ஆசனத்துக்காக அவர்களுடன் கூட்டுவைக்கத் தலைப்பட்டுள்ளார்கள்.

விடுதலைப் போராளிகளை அழிப்பதற்கு இராணுவத்துக்குத் துணைபோனவர்களுடன் கூட்டு. வடக்கில் ஆயிரம் விகாரைகளை அமைப்போம் என்று தேர்தல்விஞ்ஞாபனத்தில் கூறிய யானைச் சின்னக்காரர்களுடன் கூட்டு. காணாமல் போனவர்கள் பற்றித்தன்னால் இனி எதுவும் தெரிவிக்க இயலாது என்று ஜனாதிபதி கைவிரித்த பின்புங்கூட கைச் சின்னக்காரர்களுடன் கூட்டு. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் குழம்பிப்போய் நிற்க, எமது தலைவர்களோ இவற்றைத் தங்களது அரசியல் சாணக்கியம் என்று வியாக்கியானம் செய்கிறார்கள்.

சனசமூக நிலையங்கள் எந்த அரசியல்வாதிகளிடம் இருந்தும், எந்தக் கட்சிக்காரர்களிடம் இருந்தும் அபிவிருத்திக்காக நிதியைப் பெறுவதில் தவறேதும் இல்லை. இந்த நிதி அரசியல்வாதிகளினதோ, அரசியல்கட்சிகளினதோ சொந்தப்பணமல்ல. மக்கள் செலுத்தும் வரிப்பணமே மீளவும் உங்கள் கைக்கு வந்துசேருகிறது. ஆனால், கைநீட்டிக் காசு வாங்கிவிட்டோமே என்பதற்காக அரசியலில்; அவர்கள் எல்லோருக்கும் நீங்கள் விசுவாசமாக வாக்களிக்கவேண்டிய அவசியமில்லை. அவ்வாறு செய்யவும் கூடாது.

தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம் அஞ்சல் ஓட்டம் போன்றது. எமது தலைவர்கள் பலர் அதைக் கைவிட்டாலும் அதைக் கையில் எடுத்து அடுத்தகட்டத்துக்குப் பயணிக்க எம்மிடம் எவரும் இல்லாமல் போகவில்லை. காலம் விரைவில் அடையாளம் காட்டும்.

அரசாங்கம் திட்டமிட்டு ஏற்படுத்திவரும் சாதி, சமயப் பிளவுகளுக்குள் சிக்கி நாம் சிதறுண்டுபோகாமல் நாம் எல்லோரும் தமிழர்கள் என்று தமிழ்த்தேசியர்களாக ஒன்றுபட்டுநின்றால் எமது இலட்சியத்தை நாம் அடைந்தே தீரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Response