
எளிய மக்களின் கதைகள் சினிமாவாகி, அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்போது, அது ஒரு படைப்பாளனின் தனிப்பட்ட மகிழ்ச்சி அல்ல, இந்த சமூகத்தின் மகிழ்ச்சி என்று ‘பாம்பு சட்டை’ இயக்குனர் ஆடம்தாசனை பாராட்டியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.
சமீபத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான `பாம்புசட்டை’ திரைப்படம், ரசிகர்களிடயே வரவேற்பையும் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. இயக்குநர் ஷங்கருடன் `எந்திரன்’, `அந்நியன்’, `சிவாஜி’ படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஆடம் தாசனுக்கு `பாம்புசட்டை’ முதல் திரைப்படம்.
இந்தப்படத்தை பார்த்துவிட்டு ஆடம் தாசனை அழைத்த ரஞ்சித், படம் குறித்து பாராட்டியதுடன், கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்தைப் பற்றியும், அவரது அப்பாவாக நடித்த சார்லி பற்றியும் சிலாகித்து பேசினாராம்.. கீர்த்தி சுரேஷ் பாத்திரப் படைப்பிற்காக உங்களை நூறு முறை பாராட்டுவேன் என்றும் கூறினாராம் ரஞ்சித்.


