தானா சேர்ந்த கூட்டத்தில் சூர்யா இவ்வளவு கீழ்த்தரமான வசனங்களைப் பேசுவதா? – ஒரு ரசிகரின் வேதனை

தானா சேர்ந்த (தரம் கெட்ட?) கூட்டம் . . . .

சூர்யாவின் படங்களுக்கு குடும்பம் சகிதமாக மக்கள் வர, ‘மாஸ் ஹீரோ’ என்பதையும் தாண்டி நல்ல படங்கள் தேர்வு செய்து நடிப்பவர் என்பதும் ஒரு முக்கிய காரணம். படத்தில் சூர்யா போலீஸோ, ரவுடியோ முகம் சுளிக்கும் காட்சிகள் ஏதுமின்றி குழந்தைகளுடன் அவர் படங்களை பார்க்கலாம் என்ற நம்பிக்கையை தாய்குலங்களின் மனதில் இதுவரை நிறுவியிருந்தார்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ அந்த நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது.

எதிர்பார்த்தது போலவே தானா சேர்ந்த கூட்டத்திற்காக அரங்கம் நிரம்பி வழிந்தது, பார்வையாளர்களில் ஒவ்வொரு வரிசையிலும் குறைந்த பட்சம் ஐந்து குழந்தைகள் மூன்று முதியவர்கள் என பாப்கார்ன் பர்கர் சகிதம் அமர்ந்திருந்தனர். லஞ்சம் கேட்ட போலீசை சூர்யா ‘பொளேர்’ என்று அப்பிவிட்டு ‘சொடக்கு மேலே சொடக்கு போடுது’ என்று ஆட்டத்தை ஆரம்பிக்க, குழந்தைகளிடத்தில் உற்சாகம் பொங்கி களை கட்டியது. பக்கத்துக்கு சீட்டு சிறுவன் பாட்டு முழுக்க வரி தவறாமல் கூடவே பாடிக்கொண்டிருந்தான்.

தன் குடும்பத்தினரிடம் கரை புரண்ட உற்சாகத்தை கண்டு ஆயிரம் ரூபா செலவு செஞ்சது வீண் போகாது என்ற ஒரு அவசர நம்பிக்கை குடும்ப தலைவர்கள் மனதில் துளிர்க்க ஆரம்பித்த நொடி ‘புடுங்கலாம் புடுங்கலாம்’ என இன்டர்வியூ காட்சியில் சூர்யாவும் வில்லனும் மாறி மாறி புடுங்க ஆரம்பித்தனர். பிள்ளைகளுக்கு கேட்கக்கூடாது என்பதற்காகவே பலத்த சத்தமாக கையை தட்டி இக்காட்சியை கடந்தார்கள் சிலர். இது வெறும் ஆரம்பம்தான், காமெடி என்ற பெயரில் விக்னேஷ் சிவன் நிகழ்த்த இருக்கும் தரங்கெட்ட கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்கள் இனிமே தாண்டா இருக்கு என்ற அப்போதைக்கு இவர்களுக்கு தெரிந்திருக்காது.

படத்தின் ஒரு முக்கிய காட்சியில் ‘வாயில வச்சிருங்க’ என சிபிஐ அதிகாரி கார்த்திக் சொல்ல, வாயில தானே, வச்சிரேன் சார் என்கிறார் வில்லன். அதிர்ச்சியாகும் போலீஸ் , பக்கத்திலிருக்கும் பெண் போலீசை சற்று தள்ளி நிற்க சொல்லிவிட்டு மெதுவாக வில்லனிடம் கேட்கிறார். ” சார், வாயில வைக்கிறதுனா புரியலையே சார் என மூன்றாம் முறை கேட்க, ‘அடப்பாவிகளா’ என அப்பன்கள் எல்லாம் அவமானத்தால் சீட்டிற்குள் தலையை புதைத்து கொள்ள, ஏதோ ஒரு சீட்டிலிருந்து ஒரு சிறுமி மெல்லிய குரலில், “தாத்தா, வாயில வைக்கிறதுன்னா என்ன தாத்தா ? ” என கேட்டாள். பார்வையாளர்களிடத்தில் மயான அமைதி. பல அம்மாக்கள் தலையை கவிழ்ந்து கொண்டனர். செருப்பை தேடியிருப்பார்கள் என நினைக்கிறேன்.

அந்த சிறுமியின் தாத்தாவை ஒரு நொடி நினைத்து பார்த்தேன். அக்கேள்வியை அவர் எப்படி கடந்திருப்பார்? ஒருவேளை அதிர்ச்சியில் அழுதிருப்பாரோ ? நிச்சயம் கோபத்தில் மனதிற்குள் குமுறியிருப்பார், என்னடா படம் எடுக்கிறீங்க! போனை ஒட்டு கேட்கிறதுக்கு போய் தேவையே இல்லாம இவ்வளவு கீழ்தரமாவாடா வசனம் எழுதுவீங்க ‘தூ’ என்று துப்பியிருக்கலாம்.

இருட்டில் இவை எதுவுமே யாருக்கும் தெரியவில்லை. இது போன்ற வசனங்களை தொடர்ந்து தன் படங்களில் வைக்கும் விக்னேஷ் சிவனுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. யூத் ஆடியன்ஸை கவர்கிறேன் என்ற பெயரில் நானும் ரவுடி தான் படத்தில் கோத்தா கொம்மாளே என்று விஜய் சேதுபதியை சொல்லவைத்து நயன்தாராவை ரோஜாபூமாலை என்று மொழி பெயர்க்க வைத்தவர். இறுதிக்காட்சியில் உன்ன போடணும் என நயன்தாராவை சொல்லவைத்து, எது என்ன போடணுமா, ஐயம் ரெடி என பார்த்திபனை கிளர்ச்சியடைய வைத்தவர்.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக சூர்யா வையே இதில் ஒரு வசனத்தை சொல்ல வைத்திருக்கிறார். துப்பாக்கியை நீட்டும் போலீசிடம் “ வயசானதுக்கப்புறம் இன்னும் என்ன சார் கைல புடிச்சி அசிங்கமா ஆட்டிட்டு இருக்கீங்க’ என்கிறார் சூர்யா.

‘தட்ஸ் இட்’, படம் நல்லாருக்கா மொக்கையா என்பதெல்லாம் மறந்து போய், சூர்யாவா இவ்வளவு கீழ்த்தரமான வசனங்களை பேசுகிறார், குழந்தைகள் கெட்ட வார்த்தை பேச மாட்டாங்க, கேட்ட வார்த்தைதான் பேசுவாங்க என உபதேசம் செய்தவர் நீங்கள். உங்கள் பிள்ளைகளை இதுபோன்ற கீழ்த்தரமான வசனங்கள் நிரம்பிய படத்திற்கு அழைத்து செல்வீர்களா.

உண்மையில் இது பெரும் அதிர்ச்சி தான். உச்ச நட்சத்திரங்களின் வாயால் இந்த மாதிரி கீழ்தராமான வசனங்கள் வரும்போது மிக எளிதாக அது குழந்தைகளின் மூளையில் பதிந்து விடும். இது கிட்டத்தட்ட ஐஸ்க்ரீமில் விஷம் தடவி குடுப்பது போலத்தான். பிள்ளைகள் வெள்ளந்தியாக உள்ளெடுத்து கொள்கிறார்கள். இரட்டை அர்த்த வசனங்கள் என்ற பெயரில் வரைமுறையே இல்லாமல் வழிந்தோடும் இவை எல்லாம் simply an act of pervertism.

எந்த வித காட்சி அவசியமும் இன்றி வலிந்து இம்மாதிரியான வசனங்களை தொடர்ந்து தன் படங்களில் வெளிப்படுத்தும் விக்னேஷ் சிவன் ஒரு நல்ல இயக்குநரா என்ற கேள்வி இருக்கட்டும்.

நயன்தாரா, சூர்யா போன்ற உச்ச நட்சத்திரங்கள் கூட கேள்வியே கேட்காமல் மனதில் ஒரு சிறு குற்ற உணர்ச்சியும் இன்றி எப்படி இந்த வசனங்களுக்கு டப்பிங் பேசுகிறார்கள், நீங்களே இதை மறுக்காத போது பிறகு யார் தான் சூர்யா இதை மறுப்பார் ?

உண்மையில் இந்த பதிவு மன வலியின் உச்சமே. இந்த மாதிரி வசனங்கள் வைத்தால் தான் இன்றைய இளைஞர்கள் கை தட்டுவார்கள் என எந்த கூட்டம் உங்களை நம்ப வைத்தது. இப்படியெல்லாம் தரங்கெட்ட வசனங்கள் பேசித்தான் உங்கள் படம் வெற்றி பெற வேண்டும் என்ற பரிதாப நிலை உங்களுக்கு இல்லை. நீங்கள் ஒரு திறமையாளர், எது அறம் என உங்களுக்கு தெரியாதது இல்லை ! நல்லது செய்கிறீர்கள் சூர்யா, தயவு செய்து நல்லதை மட்டும் செய்யுங்கள்.

கா. குற்றாலநாதன்

Leave a Response