ஒரேநாளில் பெரும் சாதனை படைத்த பள்ளிக்குழந்தைகள்


ஒரே நாளில் ஆயிரக்கணக்கான சீமைக் கருவேல மரங்களை அகற்றிய பிஞ்சுக் குழந்தைகள்!

கோபிச் செட்டிப்பாளையம் தூய திரேசாள் துவக்கப்பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள், அப்பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. அரசு தாமஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், பெற்றோரின் துணையோடு ஆயிரக்கணக்கான சீமைக் கருவேல மரத்தின் செடிகளை ஒரே நாளில் வேரோடு பிடுங்கி அகற்றி சாதனை புரிந்துள்ளனர்.

இது குறித்து எழுத்தாளர் வா. மணிகண்டன் அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், பள்ளிக் குழந்தைகளுக்கும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுத் தெரிவிக்க, திரு. அரசு தாமஸ் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அப்போது அவர்,

“கோபி பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மழை இல்லை. கடந்த வாரத்தில் ஒருநாள் நல்ல மழை பெய்தது. மறுநாள் காலை மாணவர்களை அழைத்து மூன்று, நான்கு செடிகளைப் பிடுங்கிக் காட்டினேன். அடுத்த நாள் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கட்டுக் கட்டாக சீமைக் கருவேலச் செடிகளைப் பிடுங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள். அவற்றை எண்ணிப் பார்த்தபோது எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்துவிட்டது.

சிறு குழந்தைகளே இவ்வளவு செடிகளை அகற்ற முடியும் என்றால் பெரியவர்களாகிய நம்மால் சீமைக் கருவேல மரங்களை விரைவில் முழுவதுமாக அழித்துவிட முடியும். எனவே, விரைவில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ஊர்ப் பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி எங்கள் பஞ்சாயத்து முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றத் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.

அவருக்கும், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவச் செல்வங்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

Leave a Response