உங்கள் பணத்தை உங்களுக்கே வட்டிக்கு விடும் மோடியின் திட்டத்தை தோலுரிக்கும் கட்டுரை


2016 நவம்பர் 8 ஆம் தேதி மோடி அறிவித்த உயர்மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நாடெங்கும் நடக்கும் அவலங்களை நாம் அறிவோம். தொடக்கத்தில் கறுப்புப்பண ஒழிப்புக்காக இந்த நடவடிக்கை என்று சொன்ன மோடி, தற்போது பணமில்லாப் பொருளாதாரம் என்று சொல்லி வருகிறார். அது எவ்வளவு மோசமானது, மக்கள் பணத்தை அதிகாரப்பூர்வமாகவே கொள்ளையடிக்கும் செயல் என்பதை விளக்குகிறார் எழுத்தாளர் மதிவாணன். டிசம்பர் 31 அவர் எழுதியதில்…

மோடி சொன்ன 50 நாட்கள் முடிந்துவிட்டன. ஆனால், பிரச்சனைகள் ஓயவில்லை. பணம் செல்லாது என்ற அறிவிப்பு ஏழைகள் மீதும், நடுத்தர மக்கள் மீதும் ஏற்படுத்திய தாக்கம் ஆறுவதற்கு இன்னும் நாளாகும்.
இந்த நிலையில் பணமில்லாத பொருளாதாரம் என்ற ஒன்றைப் பற்றி மோடியும், நிதியமைச்சர் ஜெட்லியும் ஓயாது பேசி வருகின்றனர். நவம்பர் 8 அன்று மோடி செல்லாப் பண அறிவிப்பு விடுத்த அடுத்த நாள் பத்திரிகைகளில் முதல் பக்கம் நிறைந்து வழியும்படி பேடிஎம் உள்ளிட்ட பணமில்லா பொருளாதாரக் கம்பெனிகளின் விளம்பரங்கள் வந்ததை பலரும் நினைவில் வைத்திருக்கலாம். நிதி முதலாளிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான கள்ளக்கூட்டை அந்த விளம்பரங்கள் அடையாளப்படுத்துகின்றன.
செல்லாப் பணம் அறிவிப்பின் நோக்கம் கருப்புப் பண ஒழிப்பல்ல. அது உரத்துச் சொல்லப்படும் ஒரு பொய். திரும்பத் திரும்பச் சொல்லி உண்மை என மக்கள் நம்ப வைப்பதற்காக முயற்சி செய்கிறார்கள்.
அவர்களின் நோக்கம், இந்தியாவில் வங்கி முறைக்கு வெளியே உள்ள பணத்தை வங்கிகளிடம் கொண்டுவந்து அதனை மூலதனமாக்க முயற்சி செய்கிறார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளனர். இந்திய வங்கிகளின் பணத்தைக் கடன் வாங்கித் திருப்பிக் கட்டாத முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழில் வளர்ச்சிக்குத் தேவையான பணம் தற்போது வங்கிகளிடம் வந்து சேர்ந்துவிட்டது என்று ஆர்எஸ்எஸ் குருமூர்த்தி என்ற பொருளாதார நிபுணர் சொன்னது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்ததையும் நாம் மறக்கக் கூடாது.
அதன் தொடர்ச்சியான, மற்றும் முக்கியமான அம்சம்தான் பணமில்லாத பொருளாதாரம். மக்களின் பணத்தை வங்கிகளுக்குக் கொண்டு போய் சேர்க்கும் வழிமுறைகளில் மிகவும் நவீனமானது என்று இதனைச் சொல்லலாம்.
நீங்கள் உங்கள் பணத்தை வங்கியில் முதலீடு செய்கிறீர்கள். வங்கிகள் அவற்றை தொழில்துறையினர் உள்ளிட்ட பிறருக்கு கடன் கொடுத்து வட்டி வாங்குகின்றன. அந்த வட்டியில் உங்களுக்கும் கடன் தருகின்றன. இப்படித்தான் நாம் வங்கி முறையைப் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், அதெல்லாம் பழைய கதை.
வங்கிகளில் உங்கள் பணத்தை வைக்கிறீர்கள். அந்தப் பணத்தை நீங்கள் வாங்கும் பொருள்/ அல்லது சேவைக்காக. டிஜிட்டல் முறையில், வங்கி மூலம் செலுத்துகிறீர்கள். அப்படிச் செலுத்துவதற்கு நீங்கள் உங்கள் பணத்தைச் செலவு செய்ய வேண்டும். இதுதான் பணமில்லா பொருளாதாரத்தில் இருக்கும் அடிப்படையான, ஆனால், வெளியில் சொல்லப்படாத அம்சம்.
இதனை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உங்கள் பணத்தை நீங்கள் செலவு செய்யச் செய்ய வங்கியின் வருமானம் கூடும். அதாவது, உங்கள் பணத்திற்கு வட்டி தருவதற்கு பதிலாக, உங்கள் பணத்திற்கு உங்களிடம் வட்டி வசூல் செய்கிறார்கள். இது வேடிக்கையாக இருந்தாலும், உண்மையான நடப்பு இதுதான்.
உதாரணமாக ஸ்டேட் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் மொபைல் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ 5+ தொகையை வங்கி பிடித்துக்கொள்கிறது. ஒருவர், அனைத்து பரிவர்த்தனைகளையும் வங்கியின் மூலம் செய்கிறார் என்றால் அவர் சம்மதம் இன்றியே கணிசமான பணத்தை வங்கியிடம் இழப்பார். வங்கிப் பணியாளர்களைக் குறைத்து, கணினி மயமாக்கி, டிஜிட்டல் முறைக்குச் செல்லும்போது, வங்கிகள் தங்களின் சேவைக்கான கட்டணத்தை தனியே வசூலிப்பது இரட்டைக் கொள்ளை.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உங்கள் பணத்தை உங்களின் சம்மதமின்றி உங்களிடம் வட்டிக்கு விடும் வேலையைத்தான் பணமில்லாத பொருளாதாரம் என்று அழைக்கிறார்கள்.
வங்கிகள் மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதற்கான மற்றொரு முறைதான் பணமில்லாத பொருளாதாரம்.
ஆனால், வங்கிக் கட்டமைப்போ பலவீனமாக இருக்கிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 6,40,867 கிராமங்கள் இருக்கின்றன. இந்திய கிராமப்புரத்தில் 50,451 வங்கிக் கிளைகள் மட்டுமே இருக்கின்றன என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் சொல்கிறது. அதாவது 13 கிராமங்களுக்கு ஒரு வங்கிக்கிளை. பல மாநிலங்களில் 25 கி.மீ கடந்தால் மட்டுமே வங்கிக் கிளையை அணுக முடியும் என்ற நிலை உள்ளது. இணைய இணைப்பே 22 சதவிகிதம் பேருக்குத்தான் சென்றடைந்திருக்கிறது. இன்னும் 19 சதவிகித மக்களுக்கு மின்சார இணைப்பே இல்லை என்றுதான் இன்றைய அரசின் புள்ளி விபரங்களும் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பின் தங்கிய நிலையில் படித்தவர்கள் கூட ஸ்மார்ட் போன்களைக் கையாள்வதில் தடுமாறுகிறார்கள். கிராமப்புர மக்கள் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வருவதற்கான அறிவு அடித்தளம் இல்லை.
இந்த நிலையில் பணமில்லா பொருளாதாரம் என்பது ஒரு காரிய நோக்கோடு கூடிய முழக்கமே. 100 சதம் பணமில்லா பொருளாதாரம் சாத்தியமில்லை என்று அரசே ஒப்புக்கொள்கிறது.
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், ‘அரசு பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கிறது. ஆனால் 100 சதவிகித பணமில்லா பொருளாதாரம் என்பது சாத்தியமல்ல. அரசும் அவ்வாறு கூறவில்லை. ஆனால், இந்த நடவடிக்கையில் 15 முதல் 20 சதவிகிதம் இலக்கை அடைந்தாலே அது மிகப்பெரிய சாதனையாகும். பணமில்லா பரிவர்த்தனையில் (டிஜிட்டல் அல்லது மின்னணு பரிவர்த்தனை) வெளிப்படைத்தன்மை உள்ளது. அதாவது, பரிமாற்றம் செய்யப்படும் பணமானது கணக்கில் வந்துவிடும்.” என்று கூறியிருக்கிறார்.
இதில் நிறைய பொய்கள் உள்ளன. 1. எந்த முறையைக் கொண்டுவந்தாலும் அதில் ஏமாற்றுவது எளிதாக நடக்கும். டிஜிட்டல் முறையில் ஏமாற்றுதல் மிக எளிதாக நடக்கும். எனவே, டிஜிட்டல் முறையால் கருப்புப் பண உருவாக்கத்தைத் தடுக்க முடியாது. 2. வெறும் 15 முதல் 20 சதம் வரை டிஜிட்டல் முறைக்கு வந்தாலே பெரிய வெற்றி என்கிறார் அமைச்சர். அப்படியானால், அந்த சதவிகிதத்துக்கு வெளியே உருவாகும் கருப்புப் பணத்தை எப்படித் தடுப்பர்.
2020ல் உலகத்தின் மிகப்பெரும் வங்கிக் கட்டமைப்பில் 5வது இடத்திற்கும். 2015ல் 3வது இடத்துக்கும் இந்திய வங்கித்துறை வளர்ந்துவிடும் என்று KPMG-CII அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது இந்தியாவின் வங்கி முறைக்குள் 81 லட்சம் கோடி ரூபாய் புழங்குகிறது. அதில் பத்து சதவிகிதம் பணமில்லாத வர்த்தகத்திற்கு மாறினால், அது 8 லட்சம் கோடியாக இருக்கும். தற்போது, பணம் செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் இந்திய வங்கிகளின் கையில் கிடைத்த நிகர வருமானம் 5-6 லட்சம் கோடிகள்தான்.
வங்கிகளின் பிடிக்குள் பணப் பரிவர்த்தனையைக் கொண்டுவந்து முதலாளிகளுக்கான பணத்தைத் திரட்டுவதுதான் இந்திய அரசின் திட்டம். அதன் ஒரு பகுதிதான் பணமில்லாப் பரிவர்த்தனை என்ற முழக்கம்.

Leave a Response