அதிமுகவை உடைக்க சதி செய்யும் பாஜக – அம்பலப்படுத்தும் தி க

ஜெயலலிதா மறைந்ததும் அவர் இல்லாத வாய்ப்பைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த அதிமுக கட்சி, ஆட்சி ஆகியனவற்றை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சியில் பாரதீய சனதாக் கட்சி இறங்கியிருக்கிறது. அதை வெளிப்படுத்தி அதிமுக வினரை எச்சரிக்கும் விதமாக விடுதலை நாளேட்டில் கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதில்,,,

அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும்,முதலமைச்சருமானசெல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மறைந்து மூன்று நாள்களே ஆன நிலையில், அக்கட்சிக்குள்ளும், ஆட்சி அமைப்புக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்திட, குழம் பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்துடன் ‘‘ஆரிய சக்திகள்’’ தூண்டிலைத் தூக்கிக்கொண்டு திரியும் நிலையில், இந்தக் கட்டுரை – அறிக்கை மிகவும் முக்கியமானது – ஊன்றிப் படியுங்கள் – படியுங்கள்!)

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உடல் அடக்கம் நிகழ்ந்து இன்னும் அந்த ஈரம் கூட காயவில்லை; அதற்குள் ஆரிய விஷப் பாம்புகளின் சீற்றம் ஆரம்பமாகிவிட்டது – ஆங்கில ஏடுகளின் வாயிலாக!

அறிஞர் அண்ணா கூறிய, ‘‘சிண்டு முடிந்திடுவோய் போற்றி’’ என்ற அனுபவ மொழிப்படி, அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.,க்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து, நூல் பிளந்து பார்க்கும் முயற்சியில் ஈடுபடத் துவங்கிவிட்டனர்.

சுமூகமாகவே புதிய அமைச்சரவை – அரசியல் சட்டக் கடமைப்படி பதவியேற்று விட்டது – திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை முதலமைச்சராகக் கொண்டு; பழைய அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்களாகி விட்டனர்.

அவர்கள்மூலமோ அல்லது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க் கள் மூலமோ எந்த அதிருப்திக் குரலும் கிளம்பாத நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி இன்னமும் நிரப்பப்படாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, பல்வேறு கலகங்களை உருவாக்கிட, கட்டுக் கோப்பான அக்கட்சியினை ஜாதி அடிப்படையில் பிரித்தாள தங்களது பேனாக்கள்மூலம் ‘துவஜா ரோகணம்‘ செய்யத் தொடங்கிவிட்டனர்!

பார்ப்பனத் தலைமையிலான ஆட்சி வரும் வாய்ப்பு இப்படிப் பறிபோய்விட்டதே என்பதால், ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, மெய்க்காப்பாளராக, சேவகியாக, சிறந்த பாசம் காட்டிய தங்கையாகவே வாழ்ந்து, அந்த அம்மையாரின் கஷ்டங்கள், சிறைவாசங்களில் பங்கேற்ற திருமதி சசிகலாவைப்பற்றி தேவையில்லாமல் பெரும் ஆய்வே நடத்தி, அரசியல் ஆவர்த்தனம் செய்கிறார்கள்!

முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து துக்கம் 7 நாள் என்பதுகூட தீராத நிலையில், துயரத்தில் உழலும் அவர்களிடையே குட்டையைக் குழப்ப தூண்டிலைத் தூக்கிப் புறப்பட்டு விட்டார்கள்!

அக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களுக்கு இல்லாத கவலையும், அக்கறையும் இந்த அக்கிரகார அறிவுஜீவிகளுக்கு ஏன்? விஷயம் புரிந்தவர்களுக்குக் கண்டிப்பாகவே விளங்கும்.

இன்னொரு பக்கம் தங்கள் பக்கம் சாய்த்துக்கொள்ள – திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பா.ஜ.க.வினரின் ‘கரிசனம்‘ – அ.தி.மு.க.வின்மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது!

இரண்டு கட்சிகளின் லட்சியங்களும் ஒன்றுதானாம்; வெங்கய்யா நாயுடுகார் கண்டுபிடித்து, கசிந்துருகி கண்ணீர் மல்கக் கூறுகின்றார்!

காவிரி நதி நீர் ஆணையத்தை சட்டப்படி அமைக்க கடைசி நேரத்தில் மறுத்த பிரதமர் மோடி, அ.தி.மு.க. எம்.பி.,க்களைக்கூட சந்திக்க மறுத்த பிரதமர் மோடி ‘‘நான் தொலைப்பேசியில் கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறேன்’’ என்று முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்களிடம் கூறுகிறாரே, எப்படி?

சசிகலாவின் தலையில் கைவைத்து ‘ஆறுதல் கூறும்‘ மோடியின் நோக்கம் என்ன?’

இப்படி அரசியல் களத்தில் ‘என்னா வினோதம் பாரு; எவ்வளவு ஜோக் பாரு, பாரு, பாரு’ என்று பாடும் பரவசக் காட்சிகள் மறுபுறம்! இவைகளையெல்லாம் பார்க்கும்போது, அந்தக் காலத்தில் திராவிடர் கழக கூட்டங்களில் கூறப்பட்ட ஒரு துக்க வீட்டு ஒப்பாரிக் கதைதான் நம் நினைவிற்கு வருகிறது!

‘பந்தலிலே பாவக்காய்!’

முக்கியமான ஒருவர் மறைந்துவிட்டார். துக்க வீட் டிற்குப் பலரும் சென்று அவருடைய உறவுகளிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

இரண்டு சகோதரிகள் வந்தார்கள். மறைந்தவரின் உடலுக்கு அருகில் மறைந்தவரின் உறவுக்காரரைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி சொல்லி அழத் தொடங்கி – மூக்கைச் சிந்திக்கொண்டே,

அதில் தங்கை ஒருவர் ஒப்பாரியில்,

‘பந்தலிலே பாவக்காய்,

பந்தலிலே பாவக்காய்

தொங்குதடி எக்காடி

தொங்குதடி எக்காடி!’

என்று ஜாடை காட்டிப் பாடினாள்.

அதைப் புரிந்த மூத்த அக்காள், ஒப்பாரியிலேயே குறிப்புக் காட்டினாள்.

‘போகும் போது பாத்துக்கலாம்,

போகும்போது பறித்துக்கலாம்!’ என்று.

இவ்வளவு துக்கத்திலும் வீட்டுக்கார அம்மா அதைக் கண்காணித்து, அவ்விருவருக்கும் ஒப்பாரியிலேயே பதில் சொல்லும் வகையில் பாடினார்.

‘அய்யோ, அது விதைக்கல்லோ விட்டிருக்கு,

விதைக்கல்லோ விட்டிருக்கு!’ என்று.

அக்கதைதான் இப்போது நம் நினைவிற்கு வருகிறது!

அ.தி.மு.க. சகோதரர்களே எச்சரிக்கை!

எனவே, அ.தி.மு.க.வின் சகோதரர்களே,

சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம், அளவற்ற ஆதரவு தருவது போல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள்!

அக்கட்சியின் கட்டுக்கோப்பை – கட்டுப்பாட்டை மறவாதீர்!

சிறுசிறு ஓட்டைகளைத் தேடி அலைந்து அவற்றைப் பெரிதாக்குகின்றனர்!

அம்மையாரை எரிக்காமல் புதைத்துவிட்டனராம்; இப்படி ‘ஹிந்துத்துவா’ உணர்வுகளால் இவர்கள்மீது அம்பு எய்தும் அற்பத்தன முயற்சிகளில் ஆங்கில ஏடுகளில் அறிவு ஜீவிகள் அஸ்திரங்களை ஏவுகின்றனர் – இனியும் அதிகம் ஏவ ஆரம்பித்துவிடுவர்! அவர்களின் மூக்குடைவது உறுதி!

எதற்கும் அ.இ.அ.தி.மு.க.வினர் மட்டத்தில் தேவை தேவை – எச்சரிக்கை தேவை!

Leave a Response