சாட்டை அன்பழகன் இயக்கத்தில் மீண்டும் இணைந்த சந்திரன் ஆனந்தி

இயக்குநர் பிரபுசாலமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ ரூபாய் “

பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் அறிமுகமான சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார்.
மற்றும் கிஷோர்ரவிசந்திரன், சின்னிஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு வி.இளையராஜா, இசை டி.இமான், பாடல்கள் யுகபாரதி, படத்தொகுப்பு ஆர்.நிர்மல்,கலை ஏ.பழனிவேல்,நடனம்நோபல், சண்டைப்பயிற்சி மிராக்கிள் மைக்கேல்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.அன்பழகன். சாட்டை படத்தைத் தொடர்ந்து இந்தப்படத்தை அவர் இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குநர் அன்பழகனிடம் கேட்டோம்…

சாட்டை படம் எனது முதல் படம்.இதுவும் எனது முதல் படம் தான். ஏனென்றால் அதுவேறு கதைக் களம், இது வேறு கதைக் களம்.

பணத்தாசை தான் எல்லாத் தீமைகளுக்கும் ஆணி வேர். தேனியில் சுமையுந்து ஓட்டுநராக (லாரி டிரைவர்) இருக்கும் பரணி – பாபு இருவரும் நண்பர்கள். அவர்களுக்கு இந்த உலகத்தில் இருக்கும் ஒரே சொத்து, சொந்தம் எல்லாமே ஒரு சுமையுந்து (லாரி) மட்டும் தான்.

அந்தச் சுமையுந்துக்குப் பணம் கட்ட ஒரு பெரிய சவாரியாக கோயம்பேடு சந்தைக்கு வருகிறார்கள். ஊர் திரும்பும் போது அவர்களுக்கு ஏற்பட்ட சின்ன பணத்தாசையால் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டு ஊருக்கு போனார்களா இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை.

பணம் நிம்மதி தராது என்று எந்த ஒரு ஏழையும் சொல்வதில்லை, நிம்மதி தராத பணம் தேவையில்லை என்று எந்த பணக்காரனும் பணத்தை ஒதுக்குவதும் இல்லை. இப்படி எல்லோரது வாழ்க்கையிலும் இன்றியமையாததாகப் போன பணத்தை பற்றிய ஒரு பயணம் தான் இந்த “ ரூபாய் “ இதில் காமெடி, காதல் கலந்து உருவாக்கி உள்ளோம்.
படப்பிடிப்பு சென்னை, மூனார், மறையூர், தேனி போன்ற இடங்களில் நடந்தது என்றார் இயக்குநர் எம்.அன்பழகன்.

இந்தப் படத்தை E 5, ஜே.கே குரூப்ஸ் டாக்டர் ஜே.ஜெயகிருஷ்ணன், காஸ்மோ வில்லேஜ் சிவகுமார் இருவரும் இணைந்து உலகம்முழுவதும் வெளியிடுகிறார்கள்.

Leave a Response