பள்ளி வெள்ளிவிழாவில் நெகிழ வைத்த யுகபாரதி – விவரங்கள்

திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதி தஞ்சாவூர்க்காரர்.அங்குள்ள ஆல்வின் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.தமிழ் இலக்கணப்பயிற்சி மரக்கவிதைப் பயிற்சியை ஆசிரியர் இந்திராதேவியிடம் பயின்றவர்.

அண்மையில், அவர் படித்த பள்ளியின் வெள்ளிவிழாவில் அவரே முதன்மை விருந்தினர் எனும் பெருமை பெற்றார்.
அவ்விழாவில் அவர் செயலும் உரையும் நெகிழ்வூட்டுவதாக அமைந்தது.

அந்நிகழ்வு குறித்த விவரம்….

தஞ்சாவூர் – ஆல்வின் மேல்நிலைப் பள்ளியின்,வெள்ளி விழா 14. 02.2026 (சனிக்கிழமை) மாலை, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

முதன்மை விருந்தினராக திரைப் பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி – சிறப்பு விருந்தினர்களாக மாவட்டக் கல்வி அலுவலர்,பள்ளியின் தாளாளர்,செயலாளர், பொருளாளர்,ரோட்டரி ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடஅளவில் – பாட இணைச் செயல்பாடுகளில் – விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற – வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசன், கவிஞர் யுகபாரதியின் வகுப்பாசிரியராகவும் கணிதப் பாட ஆசிரியராகவும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்.கணேசன் போலவே கவிஞருக்குப் பாடம் கற்பித்த திருமதி ராஜேஸ்வரி,திருமதி நிர்மலா, நாகேந்திரன்,மணிசேகரன் போன்ற ஆசிரியர்கள் மற்றும் கவிஞருடன் பயின்ற இளங்கோவன்,பத்மநாபன், சாமிநாதன்,அரசப்பன்,திருமதி கஸ்தூரிதிலகம் உள்ளிட்டோர் விழா சிறக்க காரணமாயினர்.

நிகழ்வில் தனது உரையை நிகழ்த்தத் தொடங்கும் முன், கவிஞர் யுகபாரதி தனக்குப் பாடம் கற்பித்த – நிகழ்விற்கு வந்திருந்த ஆசிரியர்களை மேடைக்கு அழைத்து சால்வை அணிவித்து அவர்களை வணங்கிய பின், நிகழ்வுக்கு வந்திருந்த நண்பர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தார்.

அதனபின் அவர் பேசியதாவது…

பள்ளி,கல்லூரி,பல்கலைக்கழக மேடைகள் பல ஏறி இருந்தாலும் தனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் தலைமையில் இயங்கும்,இன்றுவரை அவருடன் நட்பு பாராட்டி வரும் ஆசிரியர்கள் – நண்பர்கள் முன்னிலையில் பேசுவது மனதில் ஒரு நெகழ்ச்சியை மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

எனக்கு அதிகம் வராத கணிதப்பாடம் கூட,ஆசிரியர் திரு கணேசன் அவர்கள் என் மீது வைத்த அன்பினால், வழிகாட்டலால் மட்டுமே கணிதப் பாடத்தில் சிறந்த மதிப்பெண்களை என்னால் பெற முடிந்தது.

பாரதிதாசன் பற்றி பாரதி எழுதிய கவிதையினை வாசிக்க செய்த – பாரதியார் வரலாற்றினை விவரிக்கும் கதாகாலட்சேப நிகழ்ச்சியில் என்னைப் பங்கேற்கச் செய்த – இலக்கிய ஐயங்களை கண்ணியத்துடன் போக்கிய – பேச்சு,கட்டுரைப் போட்டிகளுக்கு தயாரித்த எதையும் கொடுக்காமல்,தயாரிக்க வேண்டிய குறிப்புதவி நூல்களை வழங்கி என் சிந்தனைகளை நானே பெருக்கிக் கொள்ள உதவியதுஒ – கவிதைகள் என நான் எழுத முயன்றவைகளை,பிள்ளைகளின் கிறுக்கல்களைக் கூட சிறப்பான ஓவியம் என்று உரைக்கும் தாயின் உள்ளத்தோடு எனது எழுத்துகளைப் பாராட்டி ஊக்கப்படுத்தியது – தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு என்று தமிழாசிரியர்கள் கற்பித்ததை உள்வாங்கி தொடர்ந்து, நான் படித்துக் கொண்டே இருப்பதால்தான் 2500 மேற்பட்ட பாடல்களையும் 50க்கும் மேற்பட்ட நூல்களையும் படைத்துவருவதற்கும் – பல மேடைகளில் பேச்சாளராகவும் வலம் வர முடிகிறது.

கல்வியில் மட்டுமின்றி,சமூக அக்கறையுள்ள பல நாடகங்களில் என்னைப் பங்கேற்கச் செய்த திரு மணிசேகரன் அவர்கள் மூலம்தான் மண்ணின் வீரத்தையும் எளிய மனிதர்களின் மனக்கசிவுகளையும் உள்வாங்கி என் எழுத்துகளில் பதிவிட்டு படைப்புலகில் பயணித்து வருகிறேன்.

தமிழில் சற்றுக் கூடுதலான ஆர்வம் உள்ளவனாக நான் விளங்கினாலும் ஆங்கிலவழிப் பள்ளியில் பயின்ற நான், ஆங்கிலத்திலும் பிற பாடங்களிலும் மனப்பாடம் செய்து எழுதும் மாணவர்களைப் போலின்றி பாடக்கருத்துகளை உள்வாங்கி தேர்வெழுதும் மாணவனாக உருவாக்கியவர் ஆங்கில ஆசிரியர் திருமதி நிர்மலா அவர்கள்.

என் மகளிடமிருந்த ஓவிய ஆற்றலை ஓரளவு அறிந்திருந்த நான்,அவரிடம் இருந்த கவிதை எழுதும் ஆற்றலை அவர் ஒன்பதாம் வகுப்பு பயிலும் வரைகூட அறியாதவனாகவே இருந்தேன்.அவரது ஆசிரியர்,நான்தான் யுகபாரதி என்பதையும் என் மகள்தான் காவியா என்பதையும் அறிந்த பின்தான் என் மகளின் கவிதைகள் எழுதும் ஆற்றலை அவர்வழி நான் அறிந்தேன்.பின்,என் மகளிடம் இதுகுறித்து கேட்டபோது,யுகபாரதியின் மகள் என்று என்னைக் கூறுவதை விட என் தந்தை யுகபாரதி என்று கூறுவதைத்தான் நான் விரும்புகிறேன் என்றார்.இதை இங்குக் கூற காரணம்,ஒவ்வொரு மாணவரிடமும் தனித்துவமான ஆற்றல்கள் இருப்பதை பெற்றோர்கள் – ஆசிரியர்கள் நுட்பமாக அறிந்து அவர்களை ஊக்குப்படுத்த வேண்டும் என்பதற்காக இதைக் கூறுகிறேன்.

மதிப்பெண்கள் பெறவேண்டும் என்பதற்காக பாடநூல்களை படிப்பதை வலியுறுத்துவதைக் காட்டிலும் வாழ்வினில் ஆகச் சிறந்தவர்களாக உருவாக பிள்ளைகள் பல்துறையறிவு பெற வழிவகை செய்து தரவேண்டியது பெற்றோர்கள் கடமை.திருக்குறளிலும் புறநானூற்றிலும் இடம்பெறும் கண் என்ற சொல்லின் பொருள் ஆழத்தை உணர்ந்து ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்த மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் உள்ளது.

நல்ல மாணவர்களை, பிள்ளைகளைஉருவாக்குவது மட்டுமல்ல,நல்ல குடிமக்களை,நல்ல அரசியல் தலைமைகளை உருவாக்குவதற்கும் இது வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

யுகபாரதியின் இந்த உரை,அவர் ஒரு பிரபலத் திரைப்பாடலாசிரியர் என்று மட்டுமே இருந்த பிம்பத்தை உடைத்து,புகழின் உச்சிக்குச் சென்று கொண்டிருந்தாலும், தனது ஆசிரியர்களை – நண்பர்களை தொடர்ந்து மதிக்கும் பண்புதாம் அவருடைய பலம் என்பதை உணர்த்தியது.

ஆசிரியர்களைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளவேண்டும்.

தங்கள் பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கித்தந்து அவர்களை மகிழ்விப்பதற்கும் மேலாக,பல நூல்களை வாங்கித் தந்தும் – நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை முறையாகக் கையாள கற்றுத் தந்தும்,கண்காணித்தும்,குழந்தைகள் தம் பொழுதுகளைப் பயனுள்ளதாக ஆக்கும் வகையில் ஒவ்வொரு செயலிலும் தாங்களே முன்னுதாரணமாக விளங்குவது பெற்றோர்கள் கடமை

என்பதையும் உணர்த்தியது.

மொத்தத்தில் ஆல்வின் பள்ளியின் வெள்ளிவிழா அங்கு பயிலும் மாணாவச் செல்வங்களின் மனதில் எந்நாளும் தங்கும் விழாவாக மாற்றிவிட்டார் யுகபாரதி.

– குணத்தொகையன்

Leave a Response