
மதுரைக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் கடந்த இரண்டாண்டுகளாக மத்திய தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அகழ்வாய்வில் 5 ஆயிரத்து 300 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
71 தமிழ் பிராமி எழுத்துக்கள் சுடுமண் பானை ஓடுகளில் கிடைத்துள்ளன. அதில் பிராகிருதம் உள்ளிட்ட வேற்றுமொழிப் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. கிரேக்கம், ரோமாபுரி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் தமிழர்களுக்கு இருந்த வர்த்தகத் தொடர்பை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வைகை நதிக்கரையில் நகர நாகரீகம் பன்னெடுங்காலத்திற்கு முன்பே நிலைபெற்றிருந்ததை உறுதி செய்வதாக கீழடி அகழ்வாய்வு அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். மேலும் குடியிருப்புகள் மட்டுமின்றி பெரும் தொழிற்சாலை இயங்கி வந்ததற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. மூடிய வடிகால்கள், சுடுமண் குழாய்களால் அமைக்கப்பட்ட வாய்க்கால்கள், திறந்த வடிகால்கள் முதன்முறையாகக் கிடைத்துள்ளன. தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவருகிறது.
கடந்தாண்டு அகழ்வாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் மைசூரில் உள்ள மத்திய தொல்லியல்துறை அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுவிட்டன. இந்தாண்டு கிடைத்த பொருட்களும் விரைவில் கொண்டுசெல்லப்பட உள்ளன.
கீழடி அருகில் அருங்காட்சியகம் அமைத்தால் இந்தப் பொருட்களை இங்கேயே வைத்து பாதுகாப்பதோடு வருங்காலத் தலைமுறை, பழந்தமிழர் நாகரிகத்தை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். இதற்கு இரண்டு ஏக்கர் நிலப்பரப்பு கீழடிக்கு அருகில் தேவைப்படுகிறது.
ஆனால், இதுவரை தமிழக அரசு இதற்கான இடத்தை ஒதுக்கித்தரவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக அருங்காட்சியகத்திற்கான இடத்தை ஒதுக்கித்தரவேண்டும் என்று பல்வேறு அர்சியல் கட்சிகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து அறிக்கை விடுத்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்,
நடுவண் தொல்லியல் துறை தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள இந்த ஆய்வின் மூலமாக, தமிழ்நாடு வரலாறு மட்டுமன்றி, இந்தியாவின் வரலாறும்கூட மறு வாசிப்பிற்கு உள்ளாகியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளோடு வணிகத் தொடர்பு மேற்கொண்ட மிகச் செழுமையான தமிழர் நாகரிகத்தை, சிறப்போடு வெளிக்காட்டும் வகையில், கீழடி கிராமத்திலேயே கள அருங்காட்சியகம் (Site Museum) அமைக்க வேண்டும்.
ஆனால், இங்கு கிடைக்கும் தொன்மைச் சான்றுப் பொருட்கள் அனைத்தும் மைசூர் நடுவண் அருங்காட்சியகத்தில் கொண்டு போய் வைக்கிறார்கள். இதுபற்றி, தொடர்புடைய அதிகாரிகளைக் கேட்டதற்கு, “அவற்றை இங்கு வைப்பதற்கு கள அருங்காட்சியகம் இல்லை; அதை அமைப்பதற்கு இந்த இடத்திற்கு பக்கத்திலேயே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தருமாறு தமிழ்நாடு அரசிடம் கேட்டுள்ளோம். இன்னும் அது கிடைக்கவில்லை. பக்கத்திலேயே புறம்போக்கு நிலம் 2 ஏக்கர் உள்ளது. அதை இந்தியத் தொல்லியல் துறைக்கு ஒப்படைத்தால், அந்த இடத்தில் இந்தியத் தொல்லியல் துறை கள அருங்காட்சியகம் கட்டி, கீழடியில் திரட்டப்படும் தொன்மைச் சான்றுகள் அனைத்தும் இங்கேயே வைக்கப்படும்” என்றார்கள்.
2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டத் தமிழர்களிடம் அரைப் பழங்குடி நாகரிகமே நிலவியது என்ற வடநாட்டு ஆய்வாளர்கள் கூற்றைத் தகர்க்கும் வண்ணம் கீழடி ஆய்வு முடிவுகள் அமைந்துள்ளதைக் கருத்திற் கொண்டு உடனடியாக பல்நோக்கு கள அருங்காட்சியகத்தை அமைக்கத் தமிழ்நாடு அரசு நிலம் அளித்து உதவ வேண்டும்.
மூன்றாம் கட்ட ஆய்வுக்கு நடுவண் தொல்லியல் துறையே ஒப்புதல் அளித்துள்ள செய்தி, கீழடி அகழாய்வின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்த்துகின்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் கவனம் செலுத்தி, உடனடியாக அந்த 2 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி ஒப்படைத்திட அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,
சிந்து சமவெளி நாகரிகத்தைப் போல் இங்கும் ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன.
இவ்வாறு கிடைக்கப்பெற்றப் பொருட்களை பாதுகாத்து வைக்க கள அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்க மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். இல்லாவிட்டால் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட இந்த தொல்பொருட்கள் மைசூருக்குக் கொண்டுச் செல்லப்பட்டுவிடும் எனவே இதை உடனடியாகச் செய்யுமாறு தமிழக முதல்வரை வேண்டிக் கொள்கிறேன்.
சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் பழந்தமிழரின் நாகரீகத்தின் எச்சமாகும். இந்த அகழ்வாராய்ச்சிப் பணியில் மாநில அரசும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்
என்று சொல்லியிருக்கிறார்.


