
பெங்களூரு மாநகராட்சி மேயராக இருந்த மஞ்சுநாத்ரெட்டி, துணை மேயராக இருந்த ஹேமாவதி ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய மேயர்– துணை மேயர் ஆகியோரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் 28–ந் தேதி(நேற்று) நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் இடையே கூட்டணி ஏற்பட்டது. பெங்களூரு மண்டல கமிஷனரும், தேர்தல் அதிகாரியுமான ஜெயந்தி தேர்தலை நடத்தினார். கவுன்சிலர்களின் கைகளை உயர்த்துவதன் மூலம் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இதில் மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பத்மாவதிக்கு 142 உறுப்பினர்களும், பா.ஜனதா வேட்பாளர் லட்சுமிக்கு 120 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து புதிய மேயராக பத்மாவதி தேர்ந்து எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இவர் ஐம்பதாவது பெங்களூரு மேயர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்ப்பெண்மணி என்பதும் பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மெஜஸ்டிக் அடுத்த ஸ்ரீராமபுரம் ஏரியாவின், பிரகாஷ்நகர் வார்டில் இருந்து உறுப்பினராக வெற்றி பெற்றவர். இதற்கு முன்பு மூன்று முறை மாநகராட்சிமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
பத்மாவதியின் முன்னோர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும், அவர் பெங்களூருவில் பிறந்தவர். பெங்களூரு தமிழ்ச்சங்கத்துடன் நல்ல தொடர்பில் உள்ளார். இவருக்கு ஜெயபால் என்ற கணவரும், சந்தோஷ், சந்தீப் மற்றும் சுனில் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். பெங்களூரில் மேயர் பதவிகாலம் ஓராண்டு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


