28 ஆயிரம் கோடி ஆடம்பர செலவு விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லையா? பிரியங்கா காட்டம்

ரூ.8,000 கோடி விமானத்தில் பறக்கும் மோடியால், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்க மட்டும் நிதி இல்லையா?: பிரியங்கா காந்தி விளாசல்

தான் பயணிப்பதற்காக 8,000 கோடி ரூபாய் செலவு செய்து பிரதமர் மோடி தனியார் விமானத்தை வாங்கும் போது கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்க மட்டும் நிதி இல்லை என கூறுவது வியப்பை ஏற்படுத்துவதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ஆகியோர் பயணிக்க பிரத்தியேகமாக ரூ.8,000 கோடி செலவில் இரு போயிங் சொகுசு விமானங்களை ஒன்றிய அரசு வாங்கியுள்ளது. இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரியங்கா காந்தி, உத்திரப்பிரதேச வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு வரும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என தெரிவித்தார்.

உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தொழில் உற்பத்தி மையங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்படும் என்றும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டார்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது உயிர்நீத்த 700க்கும் மேற்பட்ட

விவசாயிகளை பிரதமர் மோடி சிறிதும் மதிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
கருப்பு விவசாயிகளுக்கான அனைத்து நிலுவை தொகையையும் செலுத்த மொத்தம் 4,000 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் என்று குறிப்பிட்ட பிரியங்கா காந்தி, விவசாயிகளுக்கான இந்த நிலுவை தொகையை ஒன்றிய அரசு வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டினார்.

அதேவேளையில் பிரதமர் மோடி பயணிப்பதற்காக 8,000 கோடி ரூபாய் செலவு செய்து தனியார் விமானத்தை வாங்கவும், 20,000 கோடி மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றத்தை கட்டவும் மட்டும் ஒன்றிய அரசிடம் நிதி இருக்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Response