தொடரி – திரைப்பட விமர்சனம்

தில்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு தொடரியின் உணவகத்தில் நாயகன் தனுஷ் வேலை செய்கிறார். நடிகைக்கு ஒப்பனை செய்யும் கீர்த்தி சுரேசும் அதே தொடரியில் வருகிறார்.

கீர்த்தி சுரேஷை பார்த்தவுடனே அவர் அழகில் மயங்கும் தனுஷ். பாட்டுப் பாடுவதில் ஆர்வம் உள்ளவரான கீர்த்தி சுரேஷிடம் தனக்கு பாடலாசிரியர்களைத் தெரியும் என்று பொய் சொல்லி தன்னுடைய காதல் வலையில் சிக்க வைக்கிறார்.

இந்நிலையில், அதே தொடர்வண்டியில் பயணம் செய்யும் மந்திரி ராதாரவியின் பாதுகாப்புக்கு வரும் கறுப்புப்பூனைப்படையை சேர்ந்த ஹரிஷ் உத்தமனுக்கும், தனுஷுக்கும் இடையில் சிக்கல். இதனால் நாயகி வண்டிக்குள்ளேயே தலைமறைவாகிறார். இது ஒரு பக்கம்.

இன்னொருபக்கம், தொடரியின் ஓட்டுநர் திடீரென இறந்துபோக, வண்டி கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாகச் செல்கிறது. அந்த தொடர்வண்டியை தீவிரவாதிகள் கடத்திவிட்டதாக ஊடகங்களில் பரபரப்பு செய்திகள் போய்க்கொண்டிருக்கிறது.

தலைமறைவான காதலியைத் தேடி அடையவேண்டும், கட்டுப்பாட்டை இழந்த வண்டியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மக்களைக் காக்கவேண்டும் ஆகிய கடமைகள் தனுஷை வந்தடைகின்றன.

தனுஷ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகாக இருக்கிறார்.

தம்பிராமையா எடுபடவில்லை. கருணாகரன், தர்புகா சிவா, கும்கி அஸ்வின் என ஒரு கூட்டணி இருந்தாலும் நகைச்சுவை ரசிக்கும்படி இல்லை. மந்திரியாக வரும் ராதாரவி, கறுப்புப் பூனைப் படைவீரராக வரும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிப்பு நன்று.

கணேஷ் வெங்கட்ராமன், சின்னி ஜெயந்த், ஏ.வெங்கடேஷ், ஆர்.வி.உதயகுமார், இமான் அண்ணாச்சி, படவா கோபி, ஞானசம்பந்தம், பட்டிமன்றம் ராஜா ஆகியோர் சிறு சிறு கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

இயக்குனர் பிரபு சாலமன், பயணத்தை மையமாக வைத்து இக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு படத்தை முழுக்க முழுக்க தொடர்வண்டியிலேயே எடுத்திருப்பது புதுமுயற்சி.

ஊடகங்களை விமர்சிக்கும் காட்சிகள் மற்றும் வசனங்கள் வரவேற்புப் பெறுகின்றன.

தொடர்வண்டியில் (கணினி தொழில்நுட்ப உதவியுடன் என்றாலும்) நடக்கும் காட்சிகள் பலவற்றை நம்பமுடியவில்லை.

இசையமைப்பாளர் இமான் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் ஆகியோர் தங்கள் வேலைகளைச் சரியாகச் செய்திருக்கின்றனர்.

இயக்குநர் பிரபுசாலமன், படத்தில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய அளவுக்கு தம்முடைய கற்பனைவளத்தையும் நடிகர்களையும் பயன்படுத்தவில்லை.

பிறமொழிப் படங்களைத் தேடி அவற்றைத் தமிழ்ப்படுத்தும் வேலை என்றாலும் அதிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்பதை பிரபுசாலமன் உணரவேண்டும்.

Leave a Response