திருகோணமலையில் தடுத்து நிறுத்தப்பட்ட இந்திய – இலங்கை கூட்டுத்திட்டம்

இந்தியாவுடன் கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளப்படவிருந்த சம்பூர் அனல் மின் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக, சிறிலங்கா அரசாங்கம் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை நடந்த போது இதனை அறிவித்தனர்.

இது தொடர்பாக இதழாளர் செந்தமிழினி பிரபாகரன் எழுதியுள்ள பதிவில்,

மக்கள் போராட்டமே மாற்றங்களை உண்டு பண்ணும். ஏமாற்றங்களை தகர்த்தெறியும்.
போராடுவதற்கு மனதின் வலிமை போதும்.

வல்லரசுகள் கூட மன வலிமை கொண்ட மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் தோற்றுப் போகும் என்பதற்கு சிறந்த உதாரணமாக அன்று இருந்தவர் தியாக தீபம் திலீபன் அண்ணா. இது அவரது நினைவு காலங்கள்.

இந்தியாவை சம்பூரில் போராடிய மக்கள் வென்று இருக்கின்றார்கள் தமது தொடர்ச்சியான போராட்டத்தால் இன்று.
மக்கள் சக்திக்கு முன் எந்த வல்லரசும் வாலாட்ட முடியாது. மக்கள் புரட்சியின் முன் எந்த அரசும் வல்லாதிக்கத்தை நிலை நாட்ட முடியாது. மக்களே மாற்றத்தை உண்டு பண்ணும் மகத்தான சக்தியினர்.
பாலன் தோழரின் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” என்ற நூல், இயக்குனர் ஜெ ரா அவர்களின் “கணிப்பொறிக்குள் சம்பூர்” என்ற விவரண படம் போன்ற வலிமையான படைப்புகள் அண்மைக்காலங்களில் சம்பூர் மக்களுக்காக வலிமையாக குரல் கொடுத்த படைப்புகள் ஆகின.

இலங்கையில் சம்பூரை சேர்ந்த மூவின மக்களின் தொடர்ச்சியான போராட்டம், சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்த அக்கறை கொண்ட சில அறிஞர்களின் அறிக்கைகள், சில இடதுசாரிக் கட்சிகளின் குரல்கள், அம் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பிய புலம் பெயர்ந்து வாழும் கனடிய, பிரித்தானிய தமிழ் மக்களின் வலிமையான கண்டனக் குரல் என மக்கள் உலகெங்கும் இருந்து குரல் எழுப்பினர்.

இன்று சம்பூரில் இந்தியா நிறுவ இருந்த அனல் மின் நிலையம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது மாபெரும் மக்கள் போராட்டத்தின் வெற்றி என்பது உண்மையே.

ஆனால் இதற்காக பறிக்கப்பட்ட 502 ஏக்கர் மக்களின் நிலங்கள் இன்னமும் திருப்பி கொடுக்கப்படவில்லை. ஆனாலும் இந்திய அரசின் அனல் மின்நிலையம் தடுத்து நிறுத்தப்பட்டதில் இருந்து போராடினால் மக்கள் வெல்வார்கள் என்பது உறுதியாகின்றது.
எங்கள் போராட்டம் அனைத்துலக மக்கள் போராட்டமாக மாறி இருக்கின்றது.

விடுதலைக்கான குரலை கடல் கடந்தும் ஒலிக்கும் என்ற நம்பிக்கைகள் பிறக்கின்றன.
ஆனால் அவர்களை திசை திருப்பும் பச்சோந்தி அரசியலை பழுத்த…. அரசியல் தலைவர்கள் எவரும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே கவலை.

ஆனால் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள். வல்லாதிக்க அரசுகளின் கால் பிடிக்கும் தலைவர்களைத் தூக்கி எறிந்து போராடும் மக்கள் ஒன்றிணைய ஆரம்பித்திருக்கிறார்கள்

என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Response