யாரும் உயிரைத் தரவேண்டாம், உணர்வைத் தந்தால் போதும் – கண்ணீருடன் சீமான் வேண்டுகோள்

சென்னையில் செப்டம்பர் 15 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது. அதில் சீமான், அமீர், சேரன் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியின்போது பா. விக்னேஷ் திடீரென தன் மீது நெருப்பு வைத்துக கொண்டார். தீயில் கருகிய அவரை அங்கிருந்தோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனால் தமிழின உணர்வாளர்கள் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சீமான் கருத்துச் சொல்லும்போது,

இது போன்ற செயல் அனைவருக்கும் மிகுந்த மனச்சோர்வை தந்து நம்மை பின்னடையத் தான் செய்யும். இது போன்ற செயல் ஒரு போதும் என்னை ஊக்கப்படுத்தாது மன வேதனை தான் தரும். நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர விடாது.
யாரும் உயிரைத் தர வேண்டாம் உணர்வைத் தந்தால் போதும்.

பல இலட்சம் உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம் மேலும் எந்த உயிரும் பலியாகக் கூடாது, நாம் கொடுத்த உயிர்கள் போதும். உங்கள் ஒவ்வொருவர் மீதும் சின்னக் கீறல் பட்டாலும் அது என்னை பாதிக்கும் எனக்கு வேதனையைத் தான் தரும்.

ஒவ்வொரு தமிழனின் பாதுகாப்பான வாழ்வுக்குத்தான் நான் போராடுகிறேன் உங்கள் உயிரை போக்கிக்கொள்ள இல்லை.
உங்கள் செயல் அனைத்திற்கும் நான் தான் பதில் சொல்ல வேண்டும். அந்தத் தம்பியின் தாய் தந்தை உன்னை நம்பித் தானே என் பிள்ளை வந்தான் என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?
இதையெல்லாம் உணர்ந்து எம் தம்பிகள் செயல்படணும் என்று கலங்கினார் சீமான்.

Leave a Response