தலைவன் என்றழைக்க தகுதியுடைய ஒரே ஒருவன் மேதகு பிரபாகரன் – சுரேஷ் காமாட்சி

யார் நமக்கான தலைவனாக இருக்க முடியும்?

மக்களுக்காக தன்னை இழந்து உன்னதமான பண்பு கொண்டவரை தலைவனாக ஏற்பதுதான் போலியான தலைவர்களைத் துரத்தியடிக்கும்.

ஆளாளுக்கு தலைவன் என்கிறார்கள். தலைவன் வருகிறான்னு பாட்டு போடுறாங்க. நாட்டை விட்டே போறேன்னவர் திடீர்னு அரசியல் ஆசையில் பிக் பாஸில் மட்டும் துள்ளிக் குதிக்கிறார். இவர் நடித்த படங்கள் முத்தக் கருத்துள்ளவை. சமூகத்தை திருத்தும் சேவையை தனது இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் செய்தவர்.

இன்னொருவர் இதுவரைக்கும் சிகரெட் பிடித்து தண்ணியடித்து நடித்தவர். சமூக மாற்றங்கள் தலை முடியைக் கோதிவிடுவதில் உள்ளது என இளைஞர்களை உசுப்பிவிட்டு அவர்களுக்கு வயதாகும் வரை காத்திருந்தவர். இப்போது சிஸ்டம் சரியில்லை என்று பதவிக்கு பாதை தேடுகிறார்.

இவர்களில் யாரை தலைவர் என்று ஏற்றுக்கொள்வது? என்ன முன்னுதாரணத்தை தந்திருக்கிறார்கள் இவர்கள்?

திராவிடப் போராளிகளில் அனைவருமே தங்களை கடந்த கால ஆட்சியில் நிரூபித்துவிட்டார்கள்.
சீமான் எனக்கு அண்ணன். உடன்பிறப்பு. இந்த மண்ணிற்காக உயிர் மூச்சை பேச்சாக்கி அனல் வீசித் திரிகிறான். என் சினிமா வாழ்விற்கு குரு. தமிழினத் தலைவனாக உயர்ந்து நிற்கும் மேதகு பிரபாகரனையே தனது தலைவனாக ஏற்றுக் கொண்டவன். அவரது தமிழ்த்தேசிய கனவுகளை ஒழுங்கோடும் பற்றோடும் இளைஞர்களிடையே கொண்டு சேர்க்கும் பணியைச் செவ்வனே செய்கிறான். தமிழ்நாட்டை வளமாகவும் செழுமையாகவும் மாற்றும் தன்னம்பிக்கையை சீமானிடம் மட்டுமே பார்க்கிறேன். தலைவனின் கனவுகளை சுமந்து திரியும் ஒருவனை அண்ணனாகப் பெற்றதைவிட வேறென்ன பாக்கியம் இருக்கமுடியும். நாளைய தமிழகத்தின் தலைவனாக பார்க்க நினைக்கும் ஒருவன். வலிமையோடு தன் தலைமையின் கீழ் உண்மையான உணர்வுள்ள தம்பிகளுக்குத் தலைவனாக திகழும் அண்ணன் நாளை இந்நாட்டின் அதிசயங்களை நிகழ்த்தும் பேராசானாக இருப்பான் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு.

சீமானை அண்ணனாக கொண்டுவிட்டேன். அவன் தலைவனென்று ஏற்றுக்கொண்டவனே எனக்கும் தலைவனாகிப்போனான்.
அவன் மண்ணை மிதிக்கிறேன். அவன் பாதம்பட்ட நிலங்களில் என் கால்களும் தரிசிக்கிறது என்பதே கொடுப்பினை. என் தலைவன் துவக்கை ஏந்தித் திரிந்த பூமியில் நானும் நிற்கிறேன் என்பதே என் ஆயுள் நாட்களில் நான் பெற்ற வரமாகக் கருதுகிறேன்.

கோடி கோடியாய் சம்பாதித்து மகிழ்வாய் காலத்தை ஓட்டியிருக்க வேண்டியவன். ஆனால் சுயநலமற்று இனத்தின் விடுதலைக்காக காட்டு வாழ்க்கை வாழ்ந்தவன். தமிழினத்தை தலை நிமிரச்செய்தவன்.
விடுதலைக்காக தன் குடும்பத்தை தானமாகத் தந்தவன். எண்ணற்ற இழப்புகளை சந்தித்து தலைவன் என்ற வார்த்தைக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியிருப்பவன்.

தலைவன் என்று அழைக்க இம்மண்ணில் தகுதியுடைய ஒரே ஒருவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே.
அவர் வாழ்ந்த வல்வெட்டித் துறைக்கு சென்றேன். தலைவன் சுவாசித்த இரத்த மணம் கலந்த காற்றை சுவாசித்து புத்துயிர் பெற்று வந்திருக்கிறேன். அவனே நான் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவன் என்ற பெருமிதம் கொள்கிறேன்.

யார் நமக்கான தலைவன் என்பதை அடையாளம் காணத் திணறும் இளைஞர்களாக வரும் தலைமுறை அவதிப்பட வேண்டாம். சினிமாவில் தேடாதீர்கள். ஏமாற்றமே மிஞ்சும். தீர ஆராய்ந்து மண்ணை உண்மையாக நேசிக்கும் ஒருவனை தலைவனாகத் தீர்மானியுங்கள்.
வருங்காலங்கள் உருப்படட்டும்!

– சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்

Leave a Response