கிடாரி – திரைப்பட விமர்சனம்

நட்பு, காதல், துரோகம் என்று போய்க்கொண்டிருந்த சசிகுமார், இந்தப் படத்தில் அதிரடி நாயகனாக இறங்கி அடித்திருக்கிறார். கிடாரி என்கிற பெயருக்கேற்ப முறுக்கு மீசையும் முரட்டுத்தனமுமாக உலா வருகிறார்.

சிறுவயதிலேயே அப்பாவை இழந்துவிட்ட அவரை ஊரின் பெரிய தலை வேலராமமூர்த்தி எடுத்து வளர்க்கிறார். அவர் வேட்டைக்காரன் என்றால் சசிகுமார் வேட்டைநாய். இருவரும் சேர்ந்திருப்பதால் அந்த ஊரில் எல்லாக்காரியங்களீலும் அவர்களுடைய தலையீடு இருக்கும்.

சசிகுமார் கதாநாயகன் என்பதற்காக அவர்கள் செய்வதெல்லாம் நல்ல காரியங்கள் என்று நினைத்தால் நீங்கள் பழைய தலைமுறை. எல்லாப் படங்களிலும் வில்லனகள் செய்கிற காரியங்களை இந்தப்படத்தில் இவர்கள் செய்கிறார்கள். அவர்கள்க்கு ஊரில் எதிரிகளே கிடையாது. அப்படிப்பட்ட வேலராமமூர்த்தி வீட்டுக்குள்ளேயே புகுந்து கத்தியால் குத்தினால்?

படம் தொடங்கும்போதே கத்திக்குத்து வாங்கி வேலராமமூர்த்தி மருத்துவமனைக்குப் போக அந்த இரவும் அந்த இரவுக்குக் காரணமான கதையும் திரையில் விரிகிறது.

படத்தின் பெரும்பலம் சசிகுமார், வேலராமமூர்த்தி, மு.ராமசாமி, வசுமித்ர உள்ளிட்ட நடிகர்கள்தாம்.

நாயகி நிகிலாவிமலும் கண்களாலே பேசிக் கவர்கிறார். சசிகுமாரைக் கிள்ள வருவதும், அவருக்கு முத்தம் கொடுக்க வருவதுமென அவர் வருகின்ற காட்சிகள் ரசனை.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரின் கைவண்ணத்தில் படத்தின் தரம் உயர்கிறது.

நடிகராக நமக்குத் தெரிந்த தர்புகாசிவா, இசையமைத்திருக்கிறார். பாடல்கள் கேட்க நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையும் சிற்ப்பு.

புது இயக்குநர் பிரசாத் முருகேசன், திரைக்கதை உத்தி, நடிகர்கள் தேர்வு மற்றும் அவர்களிடமிருந்து நல்ல நடிப்பை வாங்குவது, நேர்த்தியாகப் படத்தைக் கொடுக்கவேண்டும் என்கிற முனைப்பு ஆகியனவற்றில் பலமாக இருக்கிறார். ஆனால் அவர் தேர்வு செய்த இந்தக்கதை ஹைதர் காலத்துக்கதை. அதனால் காட்சிகளும் சலிப்பூட்டுகின்றன.

வரிவிலக்குக் கூட வேண்டாம் என்று படத்துக்கு யுஏ சான்றிதழ் பெற்றிருக்கிறீர்கள். அவ்வளவு தூரம் காட்சிகளை நம்பிய நீங்கள், அதற்கான வலிமையான காரணங்களையும் வைத்திருந்தால் இந்தப் படம் பெரிதும் பேசப்பட்டிருக்கும்.

Leave a Response