கமல்ஹாசனுக்கு செவாலியே விருது – பிரபலங்கள் வாழ்த்து, கமல் நன்றி

உலகின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் முன்னோடி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரான்ஸ் அரசு 1957-ஆம் ஆண்டு முதல் செவாலியே விருதை வழங்கி வருகிறது.

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான “செவாலியே’ விருது வழங்கப்படும் என்று அந்த நாட்டின் கலாசார அமைச்சகம் அறிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனுக்கு அவரின் கலை சேவையைப் பாராட்டி செவாலியே விருது அளிக்கப்பட உள்ளது.

நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என திரையுலகின் பல துறைகளில் சிறந்து விளங்குபவர் கமல்.

இந்தச் சாதனைகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகள் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் பல்வேறு விருதுகளை கமல் தொடர்ச்சியாகப் பெற்று வருகிறார்.

பிரெஞ்சு சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஹென்றி லாங்லாய்ஸ் பெயரால் வழங்கப்படும் லாங்லாய்ஸ் விருதும் சில மாதங்களுக்கு முன்பு கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது கமல்ஹாசனுக்கு செவாலியே விருது வழங்கப்படும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. கலைத்துறையில் சிறந்த சேவையைப் பாராட்டி 1997-ஆம் ஆண்டு நடிகர் சிவாஜிகணேசனுக்கு செவாலியே வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ் நடிகர்களில் இந்த விருதை பெறுபவராக கமல்ஹாசன் உள்ளார்.

செவாலியே விருது பெறும் கமல்ஹாசனுக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து:

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய செவாலியே விருதைப் பெறும் நடிகர் கமல்ஹாசனுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகள். திரையுலகில் கடின உழைப்பு, கலைத்திறமை ஆகியவற்றால் சர்வதேச அளவிலான செவாலியே விருது பெற்றதன் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு கமல்ஹாசன் பெருமை சேர்த்திருக்கிறார். நடிகர் சிவாஜி கணேசனுக்குப் பிறகு செவாலியே விருது பெறும் கமல்ஹாசன் என்பது எனக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வணக்கம், பிரான்ஸ் அரசாங்கத்தின் மிக உயர்ந்த விருதான செவாலியர் விருதை மறைந்த நடிப்பு ஆசான் நடிகர் திலகம் டாக்டர் திரு.சிவாஜிகணேசன் அவர்களுக்கு கொடுத்து கௌரவித்தது.அதே போல் இன்று எங்கள் சகோதரர் உலக நாயகன் டாக்டர் திரு .கமல்ஹாசன் அவர்களுக்கு செவாலியர் விருதினை பிரான்ஸ் அரசாங்கம்அறிவித்துள்ளதை தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் பாராட்டப்பட்ட திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு அதே செவாலியர் விருது கிடைத்திருப்பது சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சந்தோசத்தை கொடுத்துள்ளது.
செவாலியர் விருது பெற்ற நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு பெரும் விழா எடுத்து சிறப்பித்தது போல் , திரு. கமல்ஹாசன் அவர்களுக்கும் மாபெரும் விழா எடுக்க விரும்புகிறோம்.இது அவரை நேரில் சந்தித்த பிறகு முடிவாகும்.
செவாலியர் விருது கிடைத்த எங்கள் சகோதரர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் மற்றும், அனைவர் சார்பிலும் வாழ்த்துதல்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்.​

என்று கூறப்பட்டுள்ளது.

எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

செவாலியே விருது பெற்றது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது:

பிரான்ஸ் அரசு கலை இலக்கியத்துக்காக செவாலியே விருதை எனக்கு அளிக்க முன்வந்துள்ளது. பெருமிதத்துடன் நன்றியுடன் பணிவுற்று அவ்விருதை ஏற்கிறேன். அந்த விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய நடிகர் சிவாஜிகணேசனையும், வட நாட்டு பாமரரும் அறியச் செய்த சத்யஜித்ரேயும் என் கரம் கூப்பி வணங்குகிறேன். இந்தச் செய்தியை எனக்குத் தெரிவித்த இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டர் ஜிலருக்கும் எனது நன்றி.

இனி நான் செய்ய வேண்டிய கலை இலக்கியப் பணிக்கான ஊக்கியாகவே இந்த விருதை நான் உணர்கிறேன். கலைக் கடற்கரையில் கைம்மண் அளவு அள்ளிவிட்ட பெருமை, எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பதை நான் உணர்கிறேன். வயதிலாது என்றும் ஆர்ப்பரிக்கும் கலைக் கடல் அலைகள், இத்தகைய தருணங்களில் கரை மோதி, என் போன்றோர் முகத்தில் தெளித்து, பெருவித மயக்கம் கலைத்து, உதடும் நனைத்து, உப்பிட்டவர்களின் நினைவையும் உணரச் செய்கிறது.

இதுவரையான எனது கலைப்பயணம் தனி மனிதப் பயணம் இல்லை என்பதை உணர்கிறேன். கைதாங்கி, எழுத்தும், கலையும் அறிவித்த பெரும்கூட்டத்துடனே, நான் ஏற்ற யாத்திரை இது என்பதை உணர்கிறேன். அக் கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள் கூட்டங்கள். நாலு வயது முதல் என் கைபிடித்து, படியேற்றி, பீடத்தில் அமர்த்திப் பார்க்கும் தாய்மையுள்ளம் கொண்ட அவர்களுக்கும் இந்த விருது அர்ப்பணம்.

என் பெற்றோர் இருந்து பார்க்க இயலாத குறையை, என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும், இளையோரும், என் சிறு வெற்றிக்கும் ஆர்ப்பரிக்கும் ரசிகர் கூட்டமும் போக்கிவிடுகிறது. இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Leave a Response