
தேனி மாவட்டம், வருசநாடு ஆதிவாசிகள் காலனியில் வசித்து வந்த பலியர் இன மக்கள் கடந்த 15 தினங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதிகளில் தேன், கிழங்கு உள்பட சில பொருட்களை எடுத்து வர சென்றனர் அப்பொழுது அந்த பலியர் இன பெண்களை சுருளிப்பட்டி அருகே வனத்துறையினர் தடுத்து சோதனை என்ற பெயரில் அவர்களுடைய ஆடைகளை கழற்ற சொல்லி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இந்த விசயத்தை அந்த பாதிக்கப்பட்ட பழங்குடியினர் காலனியில் உள்ள குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தியன் பேரில் அங்கிருந்த அங்கிருந்து 10க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மேகமலை வனசரக அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை சத்தம் போட்டனர்.
ஆனால் அதிகாரிகளோ பலியர் இன மக்கள் வனச்சரக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதாக கூறி பலியர் இன மக்களான செல்வம், ஜெயக்குமார், பாண்டீஸ்வரன், சூர்யா, சேகர், அய்யனார் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக சட்டசபையில் தி.மு.க.வினர் குரல் கொடுத்ததின் பேரில் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட், திருமாவளவன் உள்பட அரசியல் கட்சியினர் பொய்வழக்கு போடப்பட்ட பலியர் இன மக்களை விடுதலை செய்யக் கோரி கடலைக்குண்டிலும், தேனியிலும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்படி இருந்தும் அவர்களை விடுதலை செய்யவில்லை.
இந்நிலையில் உண்மை அறியும் குழுவொன்று அங்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டது. அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்…..
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி வனசரகம், உப்புதுரை வனசரகம், தோப்பையா புரம் வனசரகம் ஆகிய வனப்பகுதிகள் முழுவதும் சிறிதும் பெரிதுமாக 100 க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் பளியர் இன பழங்குடிகள் வாழ்கிறார்கள். அதில் ஒன்றுதான் கடமலை குண்டு அருகில் உள்ள கரட்டுபட்டி பளியர் குடியிருப்பு. வன துறையினால் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான அந்த கிராமத்திற்கு சென்றிருந்தோம்.
என்ன நடந்தது என தெரிந்து கொள்ளவும், வனதுறையினர் மீதான வழக்கு என்ன நிலையில் உள்ளது என்பதைப் பற்றி அறியவும் தமிழக ஒடுக்கபட்டோர் விடுதலை இயக்கம், தமிழர் விடியல் கட்சி மற்றும் மே பதினேழு இயக்கம், தமிழ்ப் புலிகள் அமைப்பு மற்றும் விடுதலை சிறுத்தைகள் தோழர் நாகராஜன் ஆகியோர் கரட்டுப்பட்டிக்கு சென்றோம்.
சின்னமனுர் தாண்டி வருசநாடு செல்லும் வழியில் கடமலை குண்டை அடைந்ததோம். ஊருக்கு வெளியில் வைகை ஆற்றை அடுத்து மலை அடிவாரத்தில் இருக்கிறது பளியர் காலனி. ஆற்றின் இரு புறமும் பெரும் அரசியல் அதிகாரங்களை கொண்டவர்களின் தோப்புகள் இருப்பதால், அந்த தென்னைகள் பாதிப்புகள் அடையும் என்பதால், ஆற்றில் ஒரு பிடி மண் கூட எடுக்கப்படவில்லை. அந்த மலையடிவார குடியிருப்புக்கு சென்றோம். மொத்தம் அந்த பளியர் குடியிருப்பில் 31 குடும்பங்கள் இருக்கிறது. அத்தனையும் அரசு கட்டி கொடுத்த தொகுப்புவீடுகள். தொகுப்பு வீடுகளுக்குப் பின் எந்த வீடுகளும் கட்டப்படவில்லை. நாம் சென்ற போது சில பெண்கள் மட்டுமே அங்கு இருந்தனர். சற்று தள்ளி ஒரு பாறை மீது சில குழந்தைகள் அமர்ந்து இருந்தனர். அது பள்ளிக்கூடம் என்று அறிமுகப்படுத்தினார்கள். அவர்களுக்கு தாங்கள் எந்த வகுப்பு படிக்கிறோம் என்பது கூட தெரியாமல் இருந்தது.
அப்பொழுதுதான் அருகில் இருந்த பெண்மணி சொன்னார். பள்ளி கூடம் நேற்று தான் துவங்கினார்கள். காலையில்தான் சீருடையும் செருப்பும் கொடுத்தார்கள் என்று சொன்னார். சற்று நேரத்திலேயே குழந்தைகளை பள்ளிக்குள் அழைத்தார் ஒருவர். ஒரே ஒரு அரை மட்டுமே இருக்கும் ஒரு அரசு கட்டி கொடுத்த தொகுப்பு வீடு அது. அதற்குதான் வெள்ளையடித்து பள்ளியாக மாற்றிருந்தனர். அதில் வகுப்புகள் எதுவும் கிடையாது. சில தினங்களாக மனித உரிமை ஆர்வலர்களும், மக்கள் இயக்கங்களை சேர்ந்தவர்களும் வருகை தருவதால் இந்த ஏற்பாடு.
இவர்களின் தொழில் மலையில் தலைசுற்றி வேர் , சாரனத்தி என சில வேர்களையும் மூலிகைகளையும் தேடி எடுத்து அதை காயவைத்து விற்பதாகும். மேலும் தேன் எடுப்பதும் இவர்களின் வருவாய் காரணிகளாகும். மலைகளில் இதை தேடி இவர்கள் ஐம்பது, அறுபது கிலோ மீட்டர் தூரம் நடந்து பயணம் செய்கிறார்கள். இவர்களின் ஒரு நாள் வருமானம் வெறும் 40 ருபாய் மட்டுமே.
இவர்கள் ரேசன் கடைகளில் கொடுக்கப்படும் மண்ணெண்ணையும், பருப்பும் வாங்குவதற்குக் கூட வசதி அற்றவர்களாக இருக்கிறார்கள். திருமணங்கள் போன்ற சடங்குகள் எதுவும் தற்போது அவர்கள் பின்பற்றும் சூழலில் இல்லை. பிடித்தவர்கள் சேர்ந்து வாழும் பழக்கங்களுடன் இருக்கிறார்கள். சில பகுதிகளில் தோட்டங்களில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்கிறார்கள். இவர்களுக்கு கூலி கிடையாது இன்னும் பண்ணை அடிமைகள் போலவே வாழ்கிறார்கள். சில ஆண்கள் மதுரை போன்ற இடங்களில் தினக் கூலிகளாக வேலைபார்க்கிறார்கள். கோவையில் உள்ள ஒரு நூல் ஆலையில் மூன்று நேர உணவு, தங்கும் இடம் என்ற அடிப்படையில் கூலி ஏதும் இல்லாமல் சில வளரிளம் பெண்கள் பணியாற்றி, இப்பொழுது ஊர் திரும்பி இருப்பதும் அவர்களிடம் பேசும் போது தெரிந்தது.
கடந்த 17 ஆம் தேதி வியஜா, சாந்தி மாரியம்மன்,பாப்பாத்தாய்,பார்வதி, மற்றும் முருகன், பாண்டிஸ்வர்,சூரியா, செல்வம், சேகர் ஆகியோர் வழக்கம் போல மலையில் வேர்களை எடுத்து திரும்பும் போது சூரியப்பட்டு மலைபகுதியில் வனத்துறையினர் சோதனை என்று வழிமறித்துள்ளனர். சோதனையிடுவதாக சொல்லி அதிகாரிகள் பெண்களின் புடவைகளை களைந்து சோதனையிட்டுள்ளனர். ஆண்களையும் ஆடைகளை களைந்துள்ளனர். பெண்கள் வைத்திருந்த பணத்தினை அவர்களின் மேலாடைக்குள் கையை விட்டு எடுத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போனையும் பறித்துள்ளனர். அவர்கள் மலையில் இருந்து உடும்பு, மான், முயல் போன்றவற்றை கடத்தி வருவதாகவும், அவர்களை சோதனையிடத் தான் பெண்களை ஆடைகளை அகற்றியுள்ளதாக சொல்லியுள்ளார். இரண்டு மணி நேரம் காக்க வைத்து பின்னர் அனுப்பியுள்ளனர்.
மலையடிவாரத்தில் உள்ள மேகமலை வனச்சரக அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அறிமுகமானவர்கள். அவர்களிடம் நீதி கேட்போம் அவர்கள் நமக்கு உதவுவார்கள் என்று முருகன், பாண்டிஸ்வர், சூரியா, செல்வம், சேகர் ஆகியோர் தங்கள் மனைவிகள் சித்ரவதை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு சென்று உள்ளனர். அவர்களை கைது செய்து தாக்கிய ரேஞ்சர் கர்ணன் அவர்கள் மீது வன சரக அலுவலகத்தை சூரையாடியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக மதுரை மத்திய சிறையில் இருக்கும் தங்கள் கணவனை, சென்று சந்திக்க கூட முடியாமல் இருக்கிறார்கள் இந்த பழங்குடி பெண்கள். அவர்களுக்கான வழக்குக்கு ஆஜராக வழக்கறிஞர் கூட இல்லை. பல அரசியல் தலைவர்கள் சென்று சந்தித்து செய்தியானபின், மாவட்ட நிர்வாகம் வருவாய் ஆய்வாளர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த விசாரணையிலும், ”நீ என்ன ஐஸ்வர்யா ராயா உன் சேலை புடிச்சு இழுக்க போறாங்க” என்று பாதிக்கப்பட்ட பெண்களை நோக்கி என்று கொச்சையாகப் பேசியுள்ளனர். பாவம் அவர்களுக்கு கேள்வி கேட்ட அதிகாரி யார்? அவர் பதவி என்ன? என்றெல்லாம் தெரியவில்லை. அவரும் ஒரு பெண் அதிகாரி என்றுதான் தெரிந்து இருந்தது.
நம்முடன் வந்து இருந்த தமிழ்ப் புலிகள் தோழர்கள் அடுத்து வழக்கை முன்னெடுத்து செல்லவும், மேலும் குடும்பத்தினரை சிறையில் மனுபோட்டு பார்க்கவும் .ஏற்பாடு செய்தனர். தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவும் முயற்சிகள் நடக்கிறது.
நெடுங்காலமாக வனத்தை நம்பி வாழும் மக்களை, வனத்தை விட்டு விரட்டவும் மேலும் எந்த வித தவறும் செய்யாத உழைக்கும் மக்களை தொடர்ந்து குற்றப்பரம்பரையாக மாற்றும் முயற்சியில்தான் வனத்துறை மற்றும் காவல் துறையினர் செயல்பட்டு வருகிறார்கள். தமிழத்தின் உழைக்கும் ஏழை மக்களை பல்வேறு பொய் குற்றசாட்டுகளில் கைது செய்வதும் அவர்கள் நீண்ட நெடும் காலமாக வாழும் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தவும், இந்த அரச படைகள் முயல்கின்றன. நவீன காலத்தில் நம் கண் முன்னாலேயே நம் மக்களைக் குற்றபரம்பரையாக்குகிறார்கள்.
மே பதினேழு இயக்கம்
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
