
உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா முதல் 11 கிராம் எடையளவே கொண்ட மிகச்சிறிய கேமராக்களும், முதல் 3டி கேமரா, பிஸ்டல் கேமரா, வாக்கிங் ஸ்டிக் கேமரா என பல அரியவகை ஆயிரக்கணக்கான கேமராக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் ஆகஸ்ட் 18 அன்று திறக்கப்பட்டது.
ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் பல்லாண்டு முயற்சியின் விளைவாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், விஜிபி தங்கக்கடற்கரை வளாகத்தில் அமைந்திருக்கிறது.
இதை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
திறந்து வைத்துப் பேசிய பி.சி.ஸ்ரீராம், இன்றைக்கு கையில் போன் வைத்திருப்போர் எல்லாம் ஒளிப்பதிவாளர் ஆகிவிட்டனர். இந்நிலையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு கூறும் இந்தக் கண்காட்சி மிகவும் தேவையான ஒன்று என்றார்.
சிவகார்த்திகேயன் பேசும்போது, இவ்வளவு கேமிராக்களை ஒரு சேரப் பார்ப்பதே மகிழ்ச்சியான விசயம். இவற்றைப் பார்க்கும்போது இதில் ஆர்வமில்லாத எனக்கே, உடனே ஒரு கேமிரா வாங்கி புகைப்படக்கலையைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது. எனக்கே இப்படியென்றால் இதில் ஆர்வமுள்ளவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், இப்படி ஒரு சிறந்த செயலைச் செய்த அண்ணன் ஸ்ரீதரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றார்.
நிகழ்ச்சியில் விஜிபி சந்தோசம், பேராசிரியர் இஸ்மாயில், பாவலர் அறிவுமதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


