கொங்கு பல்தொழில் நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்களின் மனவளப் பயிற்சி முகாம் – டர்ன் அரவுண்ட் 2016, திம்பத்தை அடுத்துள்ள தலமலையில் வருகிற ஞாயிறு & திங்கள் (ஆகஸ்ட் 14 & 15, 2016) அன்று நடைபெறவுள்ளது.
பெருந்துறையில் 1983-ம் ஆண்டு துவங்கப்பட்ட கொங்கு கல்லூரியில் இதுவரை 30 பேட்ச்களில் சுமார் 15000 மாணவர்கள் பயின்றுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் போன்ற இந்தியாவின் பல பகுதிகளிலும், 20-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் பணிகள் செய்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பலம் பொருந்திய தொழில் கூட்டமைப்பை உருவாக்கவும், திறமை வாய்ந்த மனித சக்திகளை இணைக்கும்போது கிடைக்கும் பேராற்றலை இந்த தேசத்திற்கு அர்ப்பணிக்கவும் ஆண்டுதோறும் மேற்கு மலைத்தொடரில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.
ஆகஸ்ட் 14 (ஞாயிற்றுக்கிழமை) அன்று துவங்கும் முன்னாள் மாணவர்களின் உற்சாக சந்திப்பில் உறியடி, மாட்டு வண்டி சவாரி, கோணி ஓட்டம், படம் வரைதல் போன்ற கிராமிய விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து தொன்னூறு நிமிடங்கள் இடைவிடாத சிரிப்பு, டீஜே பிரதீப்பின் எலக்ட்ரானிக் இசை ஆகிய மன அழுத்தம் போக்கும் நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளது. சாகசப்பிரியர்களுக்கு மலையேற்றப் பயிற்சி கொடுக்கப்படவுள்ளது.
ஆகஸ்ட் 15 (திங்கட்கிழமை) அன்று காலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தேசியக்கொடியேற்றி பாலித்தீன் பைகள், பெட் பாட்டில்களை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த மாட்டேன் என அனைவரும் உறுதியேற்க உள்ளனர். தொடர்ந்து பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீங்குகளைப் பொதுமக்களிடம் விளக்குவதோடு துணிப்பைகள் மற்றும் சாக்குப் பைகளை வழங்கவுள்ளார்கள். பின்னர், முன்னாள் மாணவர்களின் வாழ்வில் நிகழ்ந்த திருப்புமுனையான சம்பவங்கள் மற்றும் வெற்றிக்கதைகளைப் பகிரும் நிகழ்ச்சி நடைபெறும்.
முதல்நாள் மனவளப் பயிற்சி, இரண்டாம் நாள் வனவளம் காக்கும் முயற்சி என நடைபெறும் 2 நாள் முகாமிற்கு கல்லூரி தாளாளர் குமாரசாமி தலைமை வகிக்க முதல்வர் வேதகிரீஸ்வரன், முன்னாள் துறைத் தலைவர்கள் ரவிச்சந்திரன், பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகிக்கவுள்ளார்கள். சக்தி ஃபார்ம்ஸ் ஜோதீஸ்வரன், டர்ன் அரவுண்ட் கெளரவத் தலைவர் அருள், தலைவர் ராஜேஷ் ராஜப்பா, செயலாளர் தீபக் ராஜா, பொருளாளர் தினேஷ், நிர்வாகிகள் சோமசுந்தரம், தியாகராஜன், துரைக்கண்ணன், செந்தில்வேல், கோடீஸ்வரன், முருகசண்முகம், தீனதயாளன், கபிலன், மீரா உள்ளிட்ட 200 முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
டர்ன் அரவுண்ட் 2016
இரண்டு நாள் முகாம் குறித்து நிகழ்சி ஒருங்கிணைப்பாளர் செழியன், “நஷ்டத்துல இருக்குற நிறுவனத்த லாபம் தரக்கூடிய நிறுவனமா மாற்றக்கூடிய செயலுக்குப் பெயர்தான் டர்ன் அரவுண்ட். நட்பு வட்டத்துல இருப்பவர்களை வெற்றியாளர்களாக இருக்க வைப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். பல்திறன் மேம்பாட்டு முகாம், கருத்தரங்குகள், குடும்ப சுற்றுலாக்கள், வெளிநாட்டு சுற்றுலாக்கள், தொழில் முனைவோர் மேம்பாடு என ஏராளமான வளாகம் தாண்டிய நிகழ்ச்சிகள் (off campus activities) நடத்தி வருகிறோம். நிறைய நண்பர்கள் பயனடைந்து வருகிறார்கள். குழுவாக செயல்படுவதன் மூலம், வேலை வாய்ப்புகளையும் தொழில் வாய்ப்புகளையும் பகிர்ந்து கொள்வது எளிதாக இருப்பதோடு எல்லோருக்கும் பலனளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது” என்றார்.
இக்கல்லூரி மாணவர்கள் போல அனைத்துக்கல்லூரி மாணவர்களும் செயல்பட்டால் நல்லது.