ஈரோட்டிலிருந்து யாழ் நூலகத்துக்கு நூல்கள் அனுப்ப ஏற்பாடு

ஈரோடு புத்தகத் திருவிழாவில் இருந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நூலகத்துக்கு புதிய நூல்களை அனுப்ப மக்கள் சிந்தனைப் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள பொது நூலகம் கடந்த 1981-ஆம் ஆண்டு தீக்கிரையாக்கப்பட்டது. அரிதினும் அரிதான தமிழ் நூல்கள், ஆவணங்கள் என ஆயிரக்கணக்கான புத்தகங்கள், நூலக கட்டடத்துடன் இணைந்து சாம்பலாயின. தற்போது தமிழர்களின் முயற்சியால் யாழ்ப்பாணத்தில் நூலகக் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. மக்கள் சிந்தனை பேரவை சார்பில் யாழ்ப்பாண நூலகத்துக்கு கடந்த மாதம் சென்றபோது, அவர்களின் தற்போதைய தேவையை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது அங்கு நூல்களை சேகரிக்கும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கி இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள சில நல்லெண்ணம் கொண்ட மனித நேயமிக்க அமைப்புகள், இலங்கைத் தூதர் மூலமாக அதிகாரப் பூர்வமாக யாழ்ப்பாண நூலகத்துக்கு புத்தகங்களை அளிக்க முன்வந்துள்ளனர். அவ்வாறான அமைப்புகளுடன் சேர்ந்து மக்கள் சிந்தனை பேரவை தனது பங்களிப்பாக ஏராளமான நூல்களை வழங்க முடிவெடுத்துள்ளது.

இந்த நிலையில் ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வரக்கூடிய வாசகர்கள், யாழ்ப்பாண நூலகத்துக்கு வழங்க விரும்பும் நூல்களை வாங்கி, திருவிழா அரங்கில் செயல்படும் மக்கள் சிந்தனைப் பேரவை அரங்கில் கொடுத்து தங்கள் பெயரை பதிவு செய்யலாம். அதேபோல், புத்தகத் திருவிழாவின் நிறைவின்போது, திருவிழாவில் பங்கேற்றுள்ள பதிப்பகங்களைச் சேர்ந்தவர்கள் தங்களால் இயன்ற அளவு புத்தகங்களை வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Response