இரண்டு நாட்களில் தூக்கில் தொங்கவிருக்கும் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் – கதறும் சொந்தங்கள்

வரும் ஞாயிற்றுக்கிழமை, 2 தமிழகத் தொழிலாளர்களுக்கு கத்தார் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிற்து.
தாங்கள் செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெறுவதாக இவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
இவர்களுக்காக முகநூலில் நீங்கள் எழுதும் ஒரு வார்த்தை, ஒருவேளை இந்த ஏழைக்குடும்பங்களின் உயிர்நாடியை காக்க வேண்டிய அவசியத்தை அரசிற்கு கொடுக்கலாம் என்று மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

அவசரம்:
தமிழகத்தினைச் சார்ந்த இரண்டு தொழிலாளர்கள் இந்த வார இறுதியில் மரணதண்டனையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். கத்தார் நாட்டில் வேலைக்கு சென்ற செல்லதுரை பெருமாள் (தம்பன்நாயக்கன்பட்டி, விருதுநகர்), அழகப்ப சுப்ரமணியம் (சிலட்டூர், புதுக்கோட்டை) ஆகிய இருவருக்கும், ஒரு முதிய பெண்மணியின் கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது நபரான சிவக்குமார் அரசன் (சேலம்) என்பவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த வார இறுதியில் இவர்களுக்கான மரணதண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. இவர்களுக்கான மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இவர்களுக்கான கருணைமனுவை வெளியுறவுத்துறை பதிவு செய்திருக்கிறது.
இந்திய தூதரக அதிகாரிகள் இந்தத் தொழிலாளர்களுக்கு சரியான வகையில் வழிகாட்டி இருந்தாலோ, சட்டபூர்வ உதவிகளை வழங்கி இருந்தாலோ இவர்களுக்கு மரண தண்டனை தவிர்க்கப்பட்டிருக்கும். தாங்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபடவில்லை என்று சொல்லும் இருவருக்கும் வழக்கினை நடத்தும் வசதி இல்லாமல் போனதே இதுபோன்ற மரணதண்டனை கிடைக்க காரணமாக இருந்திருக்கிறது.
மரணதண்டனை பெற்ற செல்லதுரையின் மனைவி ஒரு தினக்கூலியாக தனது குடும்பத்தினை பார்த்துவருகிறார். அவர்களது குடும்பம் இந்த மரணதண்டனை செய்தியை அறிந்ததிலிருந்து இடிந்து போய் இருக்கிறது. கடன்களை அடைக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் ஏழைக் குடும்பங்கள் இது போன்று புலம்பெயர்ந்து உழைக்கும் உறவினர்களின் வருமானத்தினை நம்பியே வாழ்கிறார்கள். செல்லதுரையின் மகனுக்கு கல்வி கட்டணம் கட்ட இயலாத காரனத்தினால் படிப்பை நிறுத்தி இருக்கிறார்.
இந்திய அரசின் வெளியுறவுத் துறை அதன் வெளியுறவுக் கொள்கையைப் போல சராசரி உழைக்கும் மக்களை புறக்கணிக்கும் பண்பைகொண்டது என்பது பல நிகழ்வுகள் நமக்கு சொல்லும் உண்மை. புலம்பெயர்ந்து உழைக்கும் நமது ஏழை எளிய மக்களின் உழைப்பின் மூலம் தனது வருமானத்தினை பெருக்கிக் கொள்ளும் இந்திய அரசும், அதன் தூதரகங்களும், இது போன்ற உழைப்பாளிகளுக்கு சரியான தருணத்தில் உதவிகளை வழங்குவதும் கிடையாது. இந்த இருவரின் மரணதண்டனை குறித்து எந்தவிதமான குறிப்புகளும் இல்லாமலேயே இந்தியாவின் கத்தார் தூதரகம் செயல்பட்டிருக்கிறது என்பதை வழக்கறிஞர் பதிவு செய்திருக்கிறார். இந்த மரணதண்டனை செய்தியை பத்திரிக்கையில் அறிந்த வழக்கறிஞர் சுரேஸ்குமார் என்பவர் இவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ள முயன்றிருக்கிறார்.
தமிழக அதிமுக அரசும், எதிர்க்கட்சி திமுகவும் இந்த இருவருடைய மரணதண்டனையை நிறுத்தி இவர்களை மீட்கும் பணியை உடனடியாக செய்ய நாம் நெருக்கடி கொடுத்தாக வேண்டும். இந்திய அரசில் அதிக பாரளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக, பலம் கொண்ட திமுக ஆகியவை இப்பிரச்சனைகள் தொடர் பிரச்சனைகளாக தமிழர்கள் மீது நடப்பதை டில்லியின் கவனத்திற்கு கொண்டு செல்வது மட்டுமல்லாமல், டில்லி அரசின் அக்கரையற்ற போக்கினை கண்டித்து , இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்கான சட்ட, பொருளாதார-மனித உரிமை கட்டமைப்பினை மேற்காசியா, கிழக்காசியா நாடுகளில் வேலை செய்பவர்களுக்காக உடனடியாக ஏற்படுத்த வேண்டும்
அன்பான தோழர்களே,
வரும் 31ம் தேதியில் இவர்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. செல்லத்துரையின் குடும்பம் முதலமைச்சர் அலுவலகத்திற்கு ஜூலை17இல் இவர்களை காக்க வேண்டி கோரிக்கை மனுவை அளித்திருக்கிறது. அதற்கு இதுநாள் வரையில் பதில் வரவில்லை என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. சட்டமன்றத்தில் நடக்கும் நாராச சண்டைகளை நிறுத்திவிட்டு அப்பாவிகளுக்கு துயர் துடைக்கும் பணியை இந்த இரண்டு கட்சிகளும் செய்ய வேண்டும். இதை விடுத்து தங்களது கட்சி சண்டைகளை நடத்த சட்டமன்றத்தின் நேரத்தினை விரயம் செய்யாமல் இந்த அப்பாவிகளுக்காகவும் நேரத்தினை செலவு செய்வது அவர்களது கடமை.
இந்த அப்பாவிகளை மீட்கவும், அவர்களது குடும்பத்தினரின் துயர் துடைக்கவும் நமது முகநூலை விவாத களமாக பயன்படுத்த வேண்டுமென மே17 இயக்கம் கோரிக்கை வைக்கிறது. நமக்கிருக்கும் எளிய ஊடகமான முகநூலை இந்த அப்பாவிகளின் உயிருக்காகப் பயன்படுத்தி, வீண்வெட்டி விவாதம் செய்து கொண்டிருக்கும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் செவிப்பறையில் செய்தி சொல்வோம்.
மே பதினேழு இயக்கம்.

முகநூலில் வெளியிடப்பட்டுள்ள இந்த செய்திக்குறிப்பை நூற்றுக்கணக்கானோர் பகிர்ந்து வருகிறார்கள். ஓங்கி ஒலிக்கும் இந்தக்குரல் அரசின் காதுகளை எட்டவேண்டும், அவ்விருவருவரும் காப்பாற்றப்படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

Leave a Response