எனக்கு இன்னொரு பேர் இருக்கு – திரைப்பட விமர்சனம்


சென்னை ராயபுரம்தான் கதைக்களம். அந்தப்பகுதியின் பெருமை நைனா நாற்காலி தான். அந்த நைனா நாற்காலிக்கு போட்டிப்போட்டு ஏற்கனவே நைனா நாற்காலியில் இருப்பவரை திட்டமிட்டு தூக்குகிறது சரவணன், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் குழு.

இதனால் சரவணன் நைனாவாகிறார். மற்ற இருவருக்கும் கோபம் வருகிறது. ஒரு கட்டத்தில் சரவணனுக்கு முன்பு போல் வீரமாக சண்டை போட முடியவில்லை.

இதனால் தன் மகள்  திருமணம் செய்ய வேண்டும், அதே சமயம் ராயபுரத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், என்பதற்காக அடுத்த நைனா யார் என்று தேடுதல் நடக்கின்றது.

படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் போகும் இடத்தில் தற்செயலாக கொலை நடக்க, ஜிவி தான் இந்த கொலையை செய்துள்ளார், மிகவும் தைரியமான ஆள். இவர் தான் அடுத்த நைனா என கருணாஸ், யோகிபாபு ஆகியோர் பரிந்துரைக்கின்றனர்.

உண்மையில் ஜி.விக்கு இரத்தத்தைக் கண்டாலே பயம், இவர் எப்படி தாதாவானார் என்பதே கதை.

நாயகி ஆனந்தி உட்பட படத்தில் பல கதாபாத்திரங்கள், கருணாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் தான். கருணாஸ் பாகுபலி காளகேயன் மொழி பேசி அதற்கு விளக்கம் கூறும் இடம் நன்று, அதேபோல் யோகிபாபு விஜய், அஜித், தனுஷ் என யாரையும் விட்டுவைக்கவில்லை அனைவரின் வசனங்களையும் பேசி கவர்கிறார்.

இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தும் வசனங்களை வைத்தே காட்சிகள் அமைத்திருப்பது படத்தின் பலம், பாகுபலி காட்சி, ப்ரேமம் பாடல், நண்பன் படத்தின் பாடல், வேதாளம் தீம் மியூஸிக் என படத்தில் கைத்தட்ட பல இடங்கள் உள்ளன.

நகைச்சுவைப் படம் என்பதற்காக எந்த விதமான லாஜிக் காட்சியும் தேவையில்லையா என்ன? கடைசியில் ஜிவி வில்லனை அடிக்கிறார். அத்தனை பயந்த சுபாவம் கொண்டவர் ஒரே செகண்டில் வீரமாக மாறுவது இயல்பாக இல்லை.

டார்லிங் வெற்றி என்பதால் அந்த இயக்குநருடன் சேருவது, த்ரிஷாஇல்லன்னாநயன்தாரா வெற்றி என்பதால் அந்தப் பட நாயகி ஆனந்தியை மீண்டும் நடிக்கவைப்பது என்கிற கணக்குகளால் மட்டும் கதாநாயகனாக நீடித்துவிட முடியாது என்பதை ஜி.வி.பிரகாஷுக்கு உணர்த்துகிற படம். அவர் உணர்வாரா?

Leave a Response