“எனக்கு கிடைக்கும் ஹீரோக்களைத்தான் ரஜினி கமலாக பார்க்கிறேன்” ; இயக்குனர் பூபதி பாண்டியன்!


கமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் தான் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

அப்படிப்பட்டவரின் இயக்கத்தில் விமல் – ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வரும் ஜன – 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளத்துடன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் பூபதி பாண்டியன்.

“தனுஷ், விஷால் என முன்னணி ஹீரோக்களை இயக்கியதற்கும் விமல் படத்தை இயக்கியதற்கும் என்ன வித்தியாசம் என பலர் கேட்கின்றனர். எந்த வித்தியாசமும் இல்லை. தனுஷை வைத்து நான் ‘தேவதையை கண்டேன்’ படம் இயக்கும்போது, அதற்குமுன் அவர் பயணித்து வந்த விதம் வேறாக இருந்தது.

அப்போது அவர் ஒரு கமர்ஷியல் வட்டத்திற்குள்ளேயே இல்லை.. ‘ஆடுகளம்’ படம் வெளியாகி அவருக்கு தேசிய விருது கிடைத்திருந்த நேரத்தில் கூட, அவரே ஒரு பேட்டியின்போது, தான் நடித்த படங்களில் சிரமப்பட்டு நடித்தது என்றால் அது ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம் என்றுதான் கூறியுள்ளார்.

என்னை பொறுத்தவரை எனக்கு யார் ஹீரோவாக கிடைக்கிறார்களோ அவர்கள் தான் எனக்கு ரஜினி, கமல் என சொல்லுவேன்.. அவர்களை எனக்கு, என் கதைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்வேன். அந்த வகையில் தனுஷ், விஷால், போல இந்த ‘மன்னர் வகையறா’வுக்கு விமல் பொருத்தமாக இருந்தார். படம் பார்க்கும்போது ‘அட விமலை வேறு மாதிரி பயன்படுத்தியுள்ளாரே என நீங்களே சொல்வீர்கள். குறிப்பாக நீங்கள் இதுவரை பார்க்காத, விமலின் இன்னொரு பக்கத்தை இதில் பார்க்கலாம்” என்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன்.

Leave a Response