
சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 10 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது அவசியமானது.
இதனால், காங்கிரசு, இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரினார். முதல்கட்டமாக, 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரசுக் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்தது.
பின்னர், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 2 கட்சிகளும் நேற்று முன்தினம் அறிவித்தன. இதன்மூலம் தவெகவின் பலம் 116 ஆக அதிகரித்தது. ஆனால், தவெகவுக்கு ஆதரவு இல்லை என்று ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார். விசிகவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
விசிக நேற்று மாலை ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. ஐயூஎம்எல் கட்சியும், கடைசி நேரத்தில் தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து கடிதம் வழங்கியது.அதன்படி, தவெகவுக்கு பெரும்பான்மைக்கான 120 இடங்கள் கிடைத்தன.
இந்நிலையில், மாலை 6.15 மணிக்கு விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, விஜய் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். ஏற்கெனவே அங்கு வந்து காத்திருந்த காங்கிரசு, இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் சென்று ஆளுநரை விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 1.45 மணி நேரம் நடந்தது.
அப்போது, 120 உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.தமிழ்நாடு காங்கிரசு தலைவர் செல்வப்பெருந்தகை, இந்தியகம்யூனிஸ்ட் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம், விசிக சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு, மார்க்சிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார், ஐயூஎம்எல் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164 இன் கீழ் விஜய்யை முதலமைச்சராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் வழங்கினார். ஆட்சி அமைக்கவும் விஜய்க்கு அழைப்பு விடுத்தார்.
அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் 18 ஆவது முதலமைச்சராக விஜய் பதவியேற்கிறார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளதாகவும்,தவெக தரப்பில் செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர்.நிர்மல்குமார், அருண்ராஜ், வெங்கடரமணன், காங்கிரசு தரப்பில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.


