
தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
வேட்புமனுத் தாக்கல் மற்றும் மனுக்கள் பரிசீலனை முடிந்துள்ள நிலையில், நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில்,தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது….
தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள
பள்ளிக்கட்டிடங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர், கழிப்பறை மற்றும் சாய்தளம் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் 3,022 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றம் மற்றும் மிகவும் பதற்றமானவை பட்டியலில் உள்ளன. கடந்த தேர்தல்களை விட தற்போது எண்ணிக்கை குறைந்துள்ளதுடன்
இடங்களும் மாறியுள்ளன.
கடைசியாகக் கண்டறியப்படும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் எண்ணிக்கையில் துணை இராணுவப்படையினர் நியமிக்கப்படுவார்கள்.தவிர நுண் பார்வையாளர்கள்,வெப் கேம்,வீடியோ பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரேஇடத்தில் 10 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருந்தால் அங்கு துணை இராணுவப் படையினர் அதிகளவில் நிறுத்தப்படுவார்கள். தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட துணை இராணுவப் படையினர்
ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் வந்துவிடுவார்கள்.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு,விவிபாட் இயந்திரங்கள் 120 சதவீதத்தைத் தாண்டியும் இருப்பு உள்ளது.இந்தத்தேர்தலுக்கு ரூ.1,302 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.2024 நாடாளுமன்றத்
தேர்தலின்போது ரூ.1,009 கோடி,முந்தைய 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது ரூ.795 கோடி செலவானது.
‘சி விஜில்’ செயலி மூலம் பெறப்படும் புகார்களுக்கு, 100 நிமிடங்களுக்குள் தீர்வுகாண நடவடிக்கைகள்
எடுக்கப்படுகின்றன.இதுவரை இந்தச் செயலியில் 2,364 புகார்கள் பெறப்பட்டுள்ளன.அதேபோல்,தொலைபேசி
வாயிலாக 43,220 புகார்கள் வந்துள்ளன.இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள் முடிந்து பிப்ரவரி 23 ஆம் தேதி இறுதி வாக்காளர்கள்
பட்டியல் வெளியானது.அப்பட்டியலின்படி, 2,77,38,925 ஆண், 2,89,60,838 பெண், 7,617 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 இலட்சம். மாற்றுத்திறனாளிகள் என குறிக்கப்பட்ட வாக்காளர்கள் 4.63 இலட்சம், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 8.99 இலட்சமாக உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள்,பெயர் விடுபட்டவர்கள்,பெயர் சேர்த்தல்,நீக்கம் செய்தல்
உள்ளிட்டவற்றுக்கு மனுக்கள் பெறப்பட்டன.வழக்கமாக,வேட்புமனுத் தாக்கல் முடியும் நாளில் கூடுதல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அந்தவகையில் வாக்காளர் பட்டியலைத் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று
இணையதளத்தில் வெளியிட்டார்.அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 80 இலட்சத்து 30,658 ஆண்கள், 2 கோடியே 93 இலட்சத்து 4,905 பெண்கள், 7,728 3 ஆம் பாலினத்தவர் என 5 கோடியே 73 இலட்சத்து 43,291
வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி, பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியான இறுதி வாக்காளர் பட்டியலை விட 6
இலட்சத்து 35,911 வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அத்துடன் 19-20 வயதுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 14 இலட்சத்து 59,039 ஆகவும், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 10 இலட்சத்து 62,752 ஆகவும்
உயர்ந்துள்ளது.
